இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அசைக்க முடியா தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவரது பதவிக்காலம் இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைந்த நிலையில், தேர்தல்கள் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருந்தது. இதனிடையே, பிரிஜ் பூஷண் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்தினர்.
பிரிஜ் பூஷண் மீது வழக்கு தொடரப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவுக்கான தேர்தலை கடந்த ஜூன் மாதமே நடத்தி இருக்க வேண்டும். ஆனால், மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் தேர்தல் நடத்துவது மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தத் தேர்தல் மூலம் தலைவர் உட்பட 15 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தல் கடந்த 12-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் தரப்பு ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். இந்தச் சூழலில் தான், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக அதன் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக உலக மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
45 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு மே.30-ல் கடிதம் எழுதி இருந்தது. தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் தொடர்களில் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது. அதாவது, அவர்கள் இந்திய கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்க முடியாது. இந்தியா அல்லாத தனி கொடியின் கீழ் விளையாட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயல் தலைவர் கல்யாண் சௌபே உறுதிப்படுத்தினார். அதாவது அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்றாலும், அவர்கள் இந்திய தேசியக் கொடியின் கீழ் பங்கேற்க மாட்டார்கள். மேலும், அவர்கள் வெற்றி பெற்று பதக்கம் வாங்க மேடை ஏறினால், அப்போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாது.
இந்த முடிவைப் பற்றி உலக மல்யுத்த கூட்டமைப்பு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது. " இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA ) தகவலை பெற்றுள்ளது மற்றும் உலக சாம்பியன்ஷிப்பிற்கான அணிகள் தேர்வு உட்பட எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்யும்," என்று ஒரு அதிகாரி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil