டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டித் தொடர் நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. மொத்தம் 13 சுற்றுகளாக நடைபெறும் இந்த தொடரில் உலகின் முன்ணி செஸ் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டின் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு களமாடி வருகிறார்கள்.
இந்நிலையில், டாடா ஸ்டீல் செஸ் போட்டியில் 4வது சுற்றில், இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரான தமிழ்நாட்டின் வைஷாலி ரமேஷ்பாபு உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ்-வுடன் மோதினார். இந்தப் போட்டியில் வைஷாலி வெற்றியை ருசித்தார். நோடிர்பெக் யாகுபோவ் தோல்வியுற்றார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Uzbekistan GM refuses to shake hands with Vaishali on ‘religious grounds’
இந்த நிலையில், இப்போட்டியில் தோல்வி கண்ட உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகுபோவ், போட்டி முடிந்த பிறகு இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலியுடன் கை குலுக்கிக் கொள்ளவில்லை. பொதுவாக செஸ் போட்டிகள் முடிந்த பிறகு வீரர், வீராங்கனைகள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், வைஷாலியுடன் நோடிர்பெக் யாகுபோவ் கை குலுக்கிக் கொள்ள மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில், தான் ஏன் வைஷாலியுடன் கை குலுக்கிக் கொள்ளவில்லை என்பதற்கான விளக்கத்தை அளித்துள்ளார் நோடிர்பெக் யாகுபோவ். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “அன்புள்ள செஸ் நண்பர்களே, வைஷாலியுடன் விளையாட்டில் நடந்த சூழ்நிலையை நான் விளக்க விரும்புகிறேன். பெண்கள் மற்றும் இந்திய செஸ் வீரர்களுக்கு உரிய மரியாதையுடன், மத காரணங்களுக்காக மற்ற பெண்களை நான் தொடுவதில்லை என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
/https://images.indianexpress.com/2025/01/Nodirbek-Yakubboev-and-Vaishali.jpg?resize=600,338)
வைஷாலி மற்றும் அவரது சகோதரரை நான் இந்தியாவின் வலிமையான செஸ் வீரர்களாக மதிக்கிறேன். என் நடத்தையால் நான் அவர் மனதை புண்படுத்தியிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்
என்னிடம் சில கூடுதல் விளக்கங்கள் உள்ளன: முதலாவதாக செஸ் ஹராம் அல்ல. இரண்டாவதாக நான் முன்பு செய்தது (2023 இல் திவ்யாவுடன் விளையாடியதையும் அது போன்ற நிகழ்வுகளையும் குறிப்பிடுவது) அது எனக்கு தவறாகவே கருதுகிறேன்.
நான் செய்ய வேண்டியதைச் செய்கிறேன். எதிர் பாலினத்தவர்களுடன் கைகுலுக்க வேண்டாம் அல்லது பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிய வேண்டாம் என்று நான் மற்றவர்களை வலியுறுத்தவில்லை. என்ன செய்வது என்பது அவர்களின் வேலை.
இன்று நான் அதைப் பற்றி இரினா புல்மகாவிடம் சொன்னேன். அவர் அதற்கு சம்மதித்தார். ஆனால் நான் விளையாடும் இடத்திற்கு வந்ததும், நடுவர்கள் என்னிடம் குறைந்தது வணக்கம் சொல்ல வேண்டும் என்று சொன்னார்கள். திவ்யா மற்றும் வைஷாலியுடன் நடந்த கேம்களில், விளையாட்டிற்கு முன் அவர்களிடம் அதைப் பற்றி சொல்ல முடியவில்லை, மேலும் ஒரு மோசமான சூழ்நிலை இருந்தது." என்று அவர் கூறியுள்ளார்.