'கால் பண்ணி மிரட்டுனாங்க; ஏர்போர்ட்டில் இருந்து பைக்கில் ஃபாலோ பண்ணுனாங்க': வருண் சகர்வர்த்தி ஓபன் டாக்
"2021 உலகக் கோப்பைக்குப் பிறகு, எனக்கு மிரட்டல் விடுக்கும் போன் கால்கள் வந்தன. நான் விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது, ஒரு சில பேர் தங்கள் பைக்குகளில் என்னைப் பின்தொடர்ந்தனர்." என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
"2021 உலகக் கோப்பைக்குப் பிறகு, எனக்கு மிரட்டல் விடுக்கும் போன் கால்கள் வந்தன. நான் விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது, ஒரு சில பேர் தங்கள் பைக்குகளில் என்னைப் பின்தொடர்ந்தனர்." என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
"நான் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியதால் சாம்பியன்ஸ் டிராபி ஒரு பெரிய தன்னம்பிக்கை ஊக்கமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்." என்று வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக உருவெடுத்து இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பை வென்றதில் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்தத் தொடரில் தனது சுழல் ஜாலத்தை கட்டவிழ்த்து விட்ட அவர், 3 போட்டிகளில் 15.11 என்கிற எக்கனாமியில் 9 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அத்துடன், இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 2-வது இடத்தையும் பிடித்து அசத்தினார். ஆனால், அவர் கோப்பையை முத்தமிட்ட அதே துபாய் மண்ணில் கடந்த 4 ஆண்டுக்கு முன் பெரும் சரிவைச் சந்தித்தார். 2021 ஆம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக அவர் அறிமுகமான நிலையில், அவரது சுழல் பந்துகள் எளிதாக சமாளிக்கப்பட்டு, மைதானத்தின் மூலை முடுக்கெல்லாம் சிதறடிக்கப்பட்டன. இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாமலேயே வெளியேறியதற்கு அவரின் பந்து வீச்சும் ஒரு காரணமாக பேசப்பட்டது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுக்குப் பிறகு, எந்த இடத்தில் தோல்வி கண்டு துவண்டாரோ, அதே இடத்தில் தன்னை மீட்டு எடுத்திருக்கிறார். இந்திய அணியில் தமிழக வீரர் அஷ்வினுக்குப் பின் அவரது இடத்தைப் பிடிக்க போகும் வீரர் யார்? என பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நேரத்தில் பிரேமில் கூட இல்லாத வருண் இப்போது அனைவரது உதடுகளாலும் உச்சரிக்கப்படாத பெயராக மாறி இருக்கிறார். அவரது பவுலிங் பாணி பற்றிய பேச்சுகளும் அதிகரித்துள்ளன.
Advertisment
Advertisements
துபாயில் கோப்பையை தனது கையில் வைத்து ஒரு குழந்தை போல் தொட்டில் போட்டு ஆட்டுவது போல் ஏந்திய அவர், இப்போது ஐ.பி.எல் 2025 தொடருக்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த சூழலில், விஜய் டி.வி புகழ் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் வருண், துபாயில் மீண்டு வந்தது குறித்து கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக வருண் சக்கரவர்த்தி பேசுகையில், "2021 உலகக் கோப்பைக்குப் பிறகு, எனக்கு மிரட்டல் விடுக்கும் போன் கால்கள் வந்தன. 'இந்தியாவுக்கு வராதே. நீ முயற்சி செய்தாலும், உன்னால் வர முடியாது.' மக்கள் என் வீட்டிற்கு வந்து என்னைப் பின்தொடர்ந்தனர். சில சமயங்களில் நான் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. நான் விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது, ஒரு சில பேர் தங்கள் பைக்குகளில் என்னைப் பின்தொடர்ந்தனர். ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் அந்த விஷயங்களையும் இப்போது எனக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும் திரும்பிப் பார்க்கும்போது, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எல்லா நல்ல விஷயங்களும் ஒரே நேரத்தில் நடக்கின்றன என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். நான் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறேன், விமர்சனங்கள் எவ்வளவு மோசமானவை என்பதை நான் அறிவேன்,
நான் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியதால் சாம்பியன்ஸ் டிராபி ஒரு பெரிய தன்னம்பிக்கை ஊக்கமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். அந்த போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட்டபோது, நான் ஒருவருக்குச் சொந்தமானவன் என்றும், எனக்கு ஒரு இடம் இருப்பதாகவும் உணர்ந்தேன். ஆனால் இந்த வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை
மும்பையில் நடந்த டி20 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய பிறகு, நான் சென்னைக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தேன். சென்னைக்கான டிக்கெட்டுகளையும் வாங்கினேன். ஆனால் மறுநாள் காலையில், நானும் ஒருநாள் அணியில் இருப்பதாகவும், நாக்பூருக்கு வரும்படியும் என்னிடம் கூறப்பட்டது. நான் அதை எதிர்பார்க்கவில்லை. அதற்காக நான் எந்த துணிகளையோ அல்லது எதையும் எடுத்துச் செல்லவில்லை. நாக்பூருக்கு பொருட்களை அனுப்புமாறு என் குடும்பத்தினரிடம் கேட்டேன்." என்று அவர் கூறியுள்ளார்.