Venkatesh Iyer Tamil News: 2022 ஆம் ஆண்டுக்கான துலிப் டிராபி போட்டிகள் தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில், கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 15 ஆம் தேதி முதல் நடந்து வரும் முதல் அரையிறுதியில் மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக திரிபாதி 67 ரன்களும், பிருத்வி ஷா 60 ரன்களும் எடுத்தனர். பந்துவீசிய மத்திய மண்டல அணி தரப்பில் குமார் கார்த்திகேயா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய மத்திய மண்டல அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கரண் சர்மா 34 ரன்கள் எடுத்தார். சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேற்கு மண்டல அணி தரப்பில் அதிகபட்சமாக தனுஷ் கோட்யான் மற்றும் உனட்கட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தற்போது 2வது இன்னிங்சில் விளையாடிய வரும் மேற்கு மண்டல அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 336 ரன்களை குவித்து, மத்திய மண்டல அணியை விட 465 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அந்த அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சதம் விளாசி பிருத்வி ஷா 142 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஹெட் படேல் 42 ரன்களுடனும், தனுஷ் கோட்யான் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கழுத்தை தாக்கிய பந்து… சுருண்டு விழுந்த வெங்கடேஷ் ஐயர்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மத்திய மண்டல அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய இந்தியாவின் ஆல்-ரவுண்டர் வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. நின்ற இடத்திலே சுருண்டு விழுந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர்.
மத்திய மண்டல அணியில் தொடக்க வீரராக தனது ஆட்டத்தை தொடங்கிய வெங்கடேஷ் ஐயர் சிந்தன் கஜாவின் ஓவரில் ஒரு சிக்சரை பறக்கவிட்டு தனது கணக்கைத் தொடங்கினார். அடுத்த பந்தை அவர் தடுத்து ஆடவே, கோபத்தில் இருந்த காஜா பந்தை வெங்கடேஷ் இருந்த ஸ்டம்ப் பக்கம் எறிந்தார். அப்போது பந்து வெங்கடேஷின் கழுத்தை பதம் பார்த்தது. இதனால், அவர் அந்த இடத்திலே நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
அதன்பிறகு உடனடியாக ஆம்புலன்ஸ் மைதானத்தின் நடுவில் வரவழைக்கப்பட்டு, ஸ்ட்ரெச்சரில் வெங்கடேஷை தூக்கி சென்றனர். அதோடு அவர் 'காயத்துடன் ஓய்வு' பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர், மீண்டும் மைதானத்திற்கு வந்த அவரை தனுஷ் கோட்யான் அவரை 14 ரன்னில் ஆட்டமிழக்க செய்தார். இதன்பின்னர், வெங்கடேஷ் வழக்கமான ஸ்கேன்களுக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனைக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
"வெங்கடேஷ் நன்றாக இருக்கிறார், அணி ஹோட்டலுக்குத் திரும்பினர். நான் அவருடன் பேசினேன், அவர் இப்போது நன்றாக இருக்கிறார்,” என்று சம்பவம் நடந்தபோது மைதானத்தில் இருந்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“எந்தவித மூளையதிர்ச்சியும் ஏற்படாதது நிம்மதியாக இருந்தது. அவருக்கு மயக்கம் வரவில்லை, நன்றாகத் தெரிந்தார். ஆனால் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார் மற்றும் பணியில் இருந்த மருத்துவர்கள் அவரைப் பார்த்தனர். மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். வெளியே வந்த பிறகு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், எல்லாம் சாதாரணமானது. அவர் நன்றாக இருக்கிறார், ”என்று அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
'முற்றிலும் நன்றாக இருக்கிறேன்' - வெங்கடேஷ் ஐயர்
இந்திய வீரரான வெங்கடேஷ் இரண்டு ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது காயம் குறித்து பேசியுள்ள அவர், “என் காதுக்கு கீழே அடிபட்டது. இது ஆரம்பத்தில் அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன்." என்று கூறியுள்ளார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட முடியுமா என்று கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது, நான் 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளேன். விஷயங்கள் எப்படி நடக்கிறது என்பதை நான் பார்க்க வேண்டும். ”என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil