India vs England: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை 9:30 முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது.ஜெய்ஸ்வால் 76 ரன்களிலும், கில் 14 ரன்களிலும் களத்தில் உள்ளனர். நாளைதொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
ஸ்டெம்பை தட்டித் தூக்கிய ஃபோக்ஸ்
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் வீரர் பென் ஃபோக்ஸ், தன்னை நோக்கி வீசப்பட்ட பந்தை கேட்ச் பிடிக்க சென்ற போது 3 ஸ்டெம்புகளையும் தட்டி கீழே சாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியில் 2வது ஓவரை இங்கிலாந்து அணியின் மார்க் வுட் வீசினார். 150.1 கிமீ வேகத்தில் வீசப்பட்ட அவரது பந்தை எதிகொண்ட ரோகித் சர்மா டீப் திசையில் விரட்டினார். பந்தை மடக்கிப்பிடித்த ஃபீல்டர், அதனை கீப்பர் பென் ஃபோக்சை நோக்கி வீசினார். அப்போது பந்தை பிடிக்க சென்ற ஃபோக்ஸ் முன்புறம் ஸ்டெம்ப் இருந்ததை மறந்து, பந்தை வந்த திசையை நோக்கி நகர்ந்தார். அப்போது ஸ்டெம்புகளின் மேல் அவரது கால் பட்டு 3 ஸ்டம்புகளையும் சாய்ந்தன. ஃபோக்சும் இடறி கீழே சரிந்தார். இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“