வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் இடம் பெற்றுள்ள நாடுகளுக்கு இடையிலான 48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. மியாமி நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா - முன்னாள் சாம்பியன் கொலம்பியாவை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.
தொடர்ந்து நடந்த 2-வது பாதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்சி காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக களமிறங்கிய லாடரோ மார்டினெஸ் கோல் அடித்து மிரட்டினார். இதனால், ஆட்ட நேர முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 16-வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. மேலும் தொடர்ந்து 2-வது முறையாகவும் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்த போட்டியின் போது அர்ஜென்டினா அணியின் கேப்டனான மெஸ்சி காயமடைந்தார். அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. முதல் பாதி விசிலுக்கு முன், மெஸ்சி பந்தைத் துரத்தி, அதை உதைக்க முயன்றார். அவரது வலது கால் தட்டி விடப்பட்டது போல் கீழே ஊன்றிய நிலையில், கால் மடங்கி காயம் ஏற்பட்டது.
இதன் பின்னர் மெஸ்சி மைதானத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அர்ஜென்டினா பெஞ்சில் இருந்தபடி மெஸ்ஸி தனது முகத்தை மூடிக்கொண்டு அழுதார். முன்னதாக, அவர் காலில் காயம் ஏற்பட்ட போதும் கண்ணீர் மல்க அழுதார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அவரை நோக்கி ஊக்கப்படுத்தும் விதமாக ஆரவாரம் செய்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மெஸ்சிக்கு ஏற்பட்ட காயம் குறித்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசி வருகிறார்கள். பலரும் மைதானம் மோசமாக இருந்தது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
"கோபா அமெரிக்கா போட்டியின் போது ஆடுகளங்கள் மிகவும் மோசமாக இருந்தன. ஆடுகளத்தும் அவரது காலுக்கும் தொடர்பு இல்லாத காரணத்தால் அவர் காயம் அடைந்தார். உலகக் கோப்பைக்கு உண்மையான புல் தேவை. வெறும் செயற்கை புல் மட்டும் போதாது." என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் கருத்து தெரிவிக்கையில், “டிக்கெட் இல்லாத ரசிகர்கள் மைதானத்திற்குள் சென்றுள்ளார்கள். டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது மெஸ்ஸி ஆட்டத்தில் இருந்து வெளியேறியது அதிர்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
"நான் உண்மையிலேயே மெஸ்ஸியை மிஸ் செய்கிறேன்.. அது மிகவும் வேதனையான தருணம்.. யாரோ ஒருவர் உங்கள் இதயத்தை உடைப்பது போல இருந்தது" என்று இன்னொரு ரசிகர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“