10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடந்த 30-வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் போடுவதாக அறிவித்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் 63 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 167 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவரில் 3 பந்துகளை மீதம் வைத்து இலக்கை எட்டிப்பிடித்தது. சென்னை அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்தாலும், மிடில் ஆடரில் களமாடிய பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுக்க திணறி அவுட் ஆகினர். களத்தில் இருந்த தோனி - துபே தோனி லக்னோ பவுலிங்கை சமாளித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் சென்னை வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
தோனியின் மிரட்டலான ரன்அவுட்
இந்நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி லக்னோ வீரர் அப்துல் சமத்தை மிரட்டலான ரன் அவுட் எடுத்து அசத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆட்டத்தில் லக்னோ அணி பேட்டிங் ஆடிய போது, அந்த அணிக்காக ரிஷப் பண்ட் - அப்துல் சமத் ஜோடி களத்தில் இருந்தனர். இதில் அப்துல் சமத்-துக்கு 20-வது ஓவரின் முதல் பந்தை வீசினார் சென்னை அணியின் மதீஷா பத்திரனா. பந்து லெக் சைடில் ஒயிடாக செல்ல, அதற்கு அப்துல் சமத் மறுமுனையை நோக்கி ரன் ஓடினார். அப்போது, பந்தை வலது கையில் எடுத்த தோனி மறுமுனையில் இருந்த ஸ்டெம்பை நோக்கி லாவகாக தூக்கிப் போட்டார்.
'வைத்த குறி தப்பாது' என்பதைப் போல் பந்து நேராக பறந்து சென்று ஸ்டெம்பைப் பதம் பார்த்தது. அந்த முனையை நோக்கி ஓடிய அப்துல் சமத், கிரீஸ் கோட்டை தொடுவதற்குள் தோனி வீசிய பந்து ஸ்டெம்பை சிதறடித்து. அப்போது, ஸ்டெம்ப் அருகில் நின்ற மதீஷா பத்திரனா அப்துல் சமத் அவுட் எனக் கத்தினார். அது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவுட் ஆனா சோகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் அப்துல் சமத்.
தோனி தனது கிரிக்கெட் கேரியரில் இதுவரை பல ரன்-அவுட்களை எடுத்து கவனம் ஈர்த்து இருக்கிறார். 43 வயதான அவர் இன்று எடுத்த இந்த ரன்-அவுட் அவரது மகுடத்தில் சொருகப்பட்ட இறகு போல் என்றென்றும் பேசப்படும் வகையில் அமைந்து போனது. அவருக்கு இந்த ஆட்டத்தின் நாயகன் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.