Chennai Super Kings | Ms Dhoni | Shivam Dube: 17வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியாகிய நிலையில், சென்னையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் எம்.எஸ் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்.பி.சி அணியுடன் மல்லுக்கட்டுகிறது.
வி.ஐ.டி-க்கு விசிட் - பிரமிப்பில் ஆழ்ந்த துபே
ஐ.பி.எல் தொடருக்கான 10 அணிகளும் தங்களது வீரர்களுடன் பயிற்சி அமர்வுகளை நடத்தி வருகின்றன. அவ்வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை அணிக்கு மிடில் ஆடரில் நங்கூரமாக திகழ்ந்து வரும் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் சிவம் துபே, தமிழகத்தில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழத்திற்கு (வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
அப்போது அவர் மேடையில் எழுந்து நின்று பேசிய போது அங்கு திரண்டிருந்த மாணவர்கள் சி.எஸ்.கே, சி.எஸ்.கே... என ஆரவாரம் செய்தனர். இடைமறித்து பேசிய துபே, "நிச்சயமாக சி.எஸ்.கே இந்த வருடம் வலுவாக திரும்ப வருவோம்" என்று கூறினார். அப்போது மாணவர்கள் கேப்டன் தோனியின் பெயரை குறிப்பிட்டு தோனி, தோனி... என கோஷமிட்ட ஆரவாரம் செய்தனர். இதனைப் பார்த்த சிவம் துபே சில வினாடிகள் பிரமிப்பில் ஆழ்ந்தார்.
அப்போது பேசிய துபே, மாணவர்கள் தோனியின் பெயரை கோஷமிட்டது தொடர்பாக 'மாஹி பாயிடம்' கண்டிப்பாக தெரிவிப்பதாக கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய ஆல்ரவுண்டர் வீரரான சிவம் துபே, இந்த ஆண்டு தொடக்கத்தில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், துபே ஆட்டமிழக்காமல் அரைசதங்களுடன் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மொஹாலியில் நடந்த முதல் போட்டியில் அவர் 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார். அதன்பிறகு, இந்தூர் போட்டியில், அவர் 32 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது தொடர்ச்சியான 6 விக்கெட் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கி இருந்தார். அவர் இந்தாண்டு ஜூனில் அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“