இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மைதானம் இருக்கும் பகுதியில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று 2-ம் நாளில் போட்டி தொடங்கி நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. ஆனால், பவுலிங் வீசிய நியூசிலாந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்தியாவின் ஆடும் லெவன் வீரர்களில் 5 பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர். அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் இன்னிங்சில் முடிவில் இந்திய அணி 31.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் 46 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனைத்தொடர்ந்து, நியூசிலாந்து அதன் முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து, இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கான்வே 91 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், டரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை வெள்ளிக்கிழமை 3வது நாள் ஆட்டம் வழக்கம் போல் காலை 9:30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
கேட்ச்சை கோட்டை விட்ட ராகுல், கோலி
இந்நிலையில், இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் 2 முக்கியமான கேட்சுகளை கோட்டை விட்டனர். அதில் ஒன்று மிகவும் கடினமானது. அதனை கேப்டன் ரோகித் சர்மா தவற விட்டார். ஆனால், ஈஸி கேட்ச் ஒன்றை கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி கோட்டை விட்டது கேப்டன் ரோகித்தை ஆத்திரமடைய செய்தது.
கான்வே எட்ஜ் அடித்த கேட்ச்சை ரோகித் தவற விட்டார். அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்த நிலையில், அவர் டைவ் அடிக்க முயற்சித்து பிடிக்கப் பார்த்தார். ஆனால், பந்து கையில் கேரி ஆகவில்லை. ஆனால், கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் கேட்ச்சை கோட்டை விட்டது கேப்டன் ரோகித்தை ஆத்திரமூட்டியது.
சிராஜ் டாம் லதாமுக்கு வீசிய பந்தை, லாதாம் ஸ்கொயர் கட் அடிக்க, அங்கு பீல்டிங்கில் இருந்த கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி, 'நீ பிடிப்பதா, நான் பிடிப்பதா' என்கிற குழப்பத்தை லாவகமாக வந்த ஈஸி கேட்ச்சை கோட்டை விட்டனர். அவர்கள் கேட்சை தவறவிட்டதை பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா மிகவும் கோபமடைந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“