இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது.
இதனைத் தொடர்ந்து, 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்களும், நட்சத்திர விராட் கோலி 100 ரன்களும் குவித்தனர். இவர்களின் அதிரடி ஆட்டம் மூலம் இந்தியா 2வது இன்ன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதனையடுத்து, 488 ரன்கள் கொண்ட கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 12 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்ற 4வது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர்.
இருப்பினும், டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் எடுத்தனர். எனினும், இந்திய பவுலர்கள் தொடர்ந்து சிறப்பாக பவுலிங் போட்ட நிலையில், ஹெட் 89 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 47 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி தனது 2வது இன்னிங்சில் 58.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 238 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா, சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இப்போட்டியில் மொத்தமாக 8 விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அடுத்ததாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது.
கிரிக்கெட் பந்தில் ஃபுட் பால் ஆடிய ராகுல் - வீடியோ
இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய தொடக்க வீரர் கே.எல் ராகுல் தனது கால்பந்து திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடியபோது பீல்டிங் செய்து கொண்டிருந்த ராகுல் தன்னை தாண்டி ஓடிய பந்தை, கால்பந்து வீரர் போல், காலால் மறைந்து டிரிப்ளிங் செய்து தனது கைகளில் சாமர்த்தியமாக பிடித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு ரசிகர், 'பிரேசிலின் தொழில்முறை கால்பந்து வீரரான நெய்மரை விட கே.எல் ராகுலுக்கு அதிக திறன் உள்ளது' என்று கேலியாக கூறியுள்ளார். அவரது வீடியோவுக்கு கமெண்ட் செய்துள்ள ரசிகர் ஒருவர், 'ராகுல் பிரேசிலின் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ கௌச்சோவை விட சிறப்பாக ஆடுகிறார்' என்று கூறி கலாய்த்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“