இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடிய ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட். ஒரு வீரராக இந்திய அணி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர், தனது ஓய்வுக்குப் பின், பயிற்சியாளராக உருவெடுத்து இந்திய ஜூனியர் அணியை சர்வதேச அளவில் பல கோப்பையை வெல்ல உதவினார். இவரது தலைமையிலான யு-19 அணி 2018ல் உலகக் கோப்பை வென்றது.
இந்திய சீனியர் உலகக் கோப்பை தேடலை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பையை நல்ல வாய்ப்பாக கருதினார். ஆனால், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் கோட்டை விட்டது.
விட்ட கோப்பையை பிடிக்க முயற்சி போட்ட டிராவிட், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலகக் கோப்பை இந்தியா வென்று சாதனை படைக்க உறுதுணையாக இருந்தார். தற்போது இந்திய அணி தலைமை பயிற்சியாளர் பதிவில் இருந்து ஓய்வு பெற்றுள்ள டிராவிட், ஐ.பி.எல் அணிக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதுஒருபுறமிருக்க, கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்டு வரும் மகாராஜா டி20 கிரிக்கெட் தொடரில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாட ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் ரூ.50 ஆயிரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான அவரை வாங்க சில அணிகள் விருப்பப்பட்டாலும், மைசூர் வாரியர்ஸ் அணி முந்திக் கொண்டது.
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்களூர் பிளாஸ்டர்ஸ் - மைசூர் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மைசூர் வாரியர்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மனோஜ் பண்டாகே 58 ரன்களும், ஹர்சில் தர்மானி 50 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து, 183 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பெங்களூர் பிளாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி அபார வெற்றியைப் பெற்றது. அந்த அணி தரப்பில், புவன் ராஜு 51 ரன்கள் எடுத்தார்.
இந்த நிலையில், இந்த ஆட்டத்தில், பெங்களூர் அணியின் நவீன் வீசிய பந்தில் சமித் டிராவிட் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி மிரட்டினார். அவர் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி இருந்தாலும், அவர் பறக்க விட்ட சிக்ஸர் சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
நவீன் வீசிய பந்தில் புல்-ஷாட் அடித்து டீப் மிட் விக்கெட் திசையில் சிக்சரை பறக்க விட்டிருந்தார் சமித் டிராவிட். இந்த ஷாட் அப்படியே ராகுல் டிராவிட்டின் புல்-ஷாட் போலவே இருப்பதாக ரசிகர்கள் வியந்து பேசி வருகிறார்கள். மேலும், ஆல்ரவுண்டராக இருக்கும் சமித் டிராவிட்டின் பேட்டிங் மற்றும் பவுலிங் திறனை அறியவும் பலரும் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்னும் சிலர் அவருக்கு ஐ.பி.எல் தொடருக்கான ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“