IPL 2024 | Rishabh Pant: 17வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல் 2024) தொடர் மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்த தொடரில் களமாடும் 10 அணிகளும் அதன் வீரர்களுடன் முகாமிட்டு பயிற்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர் ரிஷப் பண்ட் தனது விக்கெட் கீப்பிங் பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ரிஷப் பண்ட் பயங்கரமான கார் விபத்தில் சிக்கினார். அந்த கோர விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காயத்தில் இருந்து குணமடைந்துள்ள அவர் தனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக ரிஷப் பண்ட் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், பேட்-அப் செய்துள்ள பண்ட் ஸ்டம்புகளுக்கு பின்னால் இருந்து விக்கெட் கீப்பிங் பயிற்சியை மேற்கொள்கிறார். இதேபோல், இடது கை பேட்ஸ்மேனான அவர் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.
ரிஷப் பண்ட் கடைசியாக இந்திய அணியில் விளையாடி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. 2022ல் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். சாலையில் இருந்த தடுப்பானில் கார் மோதிய விபத்தில் அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்து, நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் ஏற்பட்டன.
மும்பையில் அவரது அறுவை சிகிச்சைக்குப் பிறகு, பண்ட் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும் அவர் விரைவில் தொழில்முறை கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
"நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கும் வரை, எதிர்காலத்திற்காக அதிகம் திட்டமிட விரும்பவில்லை. நான் குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என்று மருத்துவரிடம் கேட்டேன். எல்லோரும் வெவ்வேறு விஷயங்களைப் பேசுகிறார்கள் என்று நான் அவரிடம் சொன்னேன்.
அதற்கு அவர் (டாக்டர்) 16 முதல் 18 மாதங்கள் ஆகும் என்று கூறினார். நீங்கள் எனக்கு எந்த காலக்கெடுவைக் கொடுத்தாலும், அதிலிருந்து ஆறு மாதங்களைக் குறைப்பேன் என்று மருத்துவரிடம் சொன்னேன், ”என்று பண்ட் கூறினார். மார்ச் மாதம் தொடங்கும் வரவிருக்கும் சீசனில் டெல்லி கேபிடல்ஸிற்காக ஐ.பி.எல் விளையாடுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் எண்ணவில்லை.
ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு நவம்பரில் கேபிடல்ஸ் முகாமில் கலந்து கொண்டார், மேலும் டிசம்பரில் துபாயில் அந்த அணியின் ஐ.பி.எல் ஏல அட்டவணையில் இருந்தவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
சமீபத்தில், டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், வரவிருக்கும் ஐபிஎல் சீசன் முழுவதுமாக ரிஷப் பண்ட் பங்கேற்பதில் "மிகவும் நம்பிக்கையுடன்" இருந்தாலும், 26 வயதான அவர் அதற்கு முற்றிலும் பொருத்தமாக இருப்பாரா என்று சந்தேகிப்பதாக அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WATCH: Rishabh Pant back to keeping stumps ahead of the IPL 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“