சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 36 ரன்னுக்கு அவுட் ஆகிய நிலையில், அவரது விக்கெட்டுக்குப் பின் ஜோடி அமைத்த சஞ்சு சாம்சன் - திலக் வர்மா தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். மேலும், ஜோகன்னஸ்பர்க்கில் மைதானத்தில் வான வேடிக்கை காட்டி சிக்ஸர் மழை பொழிந்தனர். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காத நிலையில், முதலில் சஞ்சு சாம்சனும், அடுத்து திலக் வர்மாவும் அடுத்தடுத்து சதம் விளாசி மிரட்டினர். 56 பந்துகளை எதிர்கொண்ட சஞ்சு 6 பவுண்டரிகள், 9 சிக்ஸர்களை பறக்கவிட்டு 109 எடுத்தார். இதேபோல், திலக் வர்மா 47 பந்துகளில் 9 பவுண்டரிகள், 10 சிக்ஸர்களுடன் 120 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 284 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி 148 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 43 ரன்கள் எடுத்தார். பவுலிங்கிலும் மிரட்டி எடுத்த இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டையும், ஹர்திக், ரமன்தீப் சிங், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்த இந்தியா தொடரை 3-1 என்கிற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
ரசிகை முகத்தை பதம் பார்த்த சிக்ஸர் - சஞ்சுவின் செயல்
இந்த நிலையில், இந்தப் போட்டியில் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அடித்த பந்து ரசிகை ஒருவரின் முகத்தை பதம் பார்த்தது. அதற்கு அவர் செய்த செயல் சமூக வலைதள பக்கத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடிபோது, 10-வது ஓவரை தென் ஆப்ரிக்க அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசினார். அதில் முதல் பந்தை சிக்சருக்கு விளாசி தனது அரைசதத்தை அடித்தார் சஞ்சு சாம்சன். பிறகு வீசப்பட்ட 2-வது பந்தையும் சஞ்சு மிட் விக்கெட் திசையில் நோக்கி சிக்ஸ் அடித்தார். அவர் அடித்த இந்தப் பந்து மைதானத்தில் திரண்டிருந்த ரசிகை ஒருவரின் முகத்தில் பட்டது.
பந்து முதலில் பாதுகாவலரைத் தாக்கிய நிலையில், பின்னர் அங்கிருந்து எகிறி அந்த ரசிகையின் தாடையை பதம் பார்த்தது. இதனால், அதிர்ந்து போன அந்த ரசிகையின் கண்ணில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. அப்போது அவருக்கு உடனடியாக ஐஸ் பேக் மூலம் ஒத்தடம் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ஆடுகளத்தில் இருந்து பார்த்த, அந்த ரசிகையை நோக்கி தனது கையை தூக்கி மன்னிப்பு கோரினார். தெரியாமல் நேரிட்ட இந்த சம்பவத்துக்கு சஞ்சு மன்னிப்பு கோரிய அவரின் மனிதநேய செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“