Jos Buttler | Shah Rukh Khan | Kolkata Knight Riders | Rajasthan Royals | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் மிரட்டல் அடி அடித்த சுனில் நரேன் சதம் விளாசி அசத்தினார். 56 பந்துகளில் 13 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 109 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 224 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 19 ரன், சாம்சன் 12 ரன், ரியான் பராக் 34 ரன், துருவ் ஜூரெல் 2 ரன், அஸ்வின் 8 ரன், ஹெட்மையர் 0 ரன் என சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும், மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய பட்லர் கடைசி ஓவரில் சதம் அடித்ததுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ராஜஸ்தானுக்கு த்ரில் வெற்றி கிடைத்தது. கடைசி வரை களத்தில் இருந்த அவர் 60 பந்தில் 9 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு 107 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அவரது அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
பட்லரை வாழ்த்திய ஷாருக்
இந்த நிலையில், இந்த ஆட்டத்தை கொல்கத்தா அணியின் உரியமையாளர் ஷாருக்கான் நேரில் கண்டு களித்தார். ஆட்டம் முடிந்த பின்னர் தங்கள் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அணியை தோல்வி பெற செய்த ஜோஸ் பட்லரை கொல்கத்தா அணியின் உரியமையாளர் ஷாருக்கான் கட்டிப்பிடித்து அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“