virat kohli whistle podu movement videos: சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களிடம் இந்திய கேப்டன் விராட் கோலி விசில் போடச்சொன்ன வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை எம். ஏ. சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 329 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதனையடுத்து, தனது முதல் இன்னிக்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஒரு கட்டத்தில் பாலோ ஆனை தவிர்க்குமா? என்ற மோசமான நிலையை அடைந்தது.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்களி்ல் சுருண்டது. சிம்பிளி 16 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 18 ரன்களிலும், கடந்த போட்டியில் இரட்டை சதமடித்த கேப்டன் ஜோ ரூட் 6 ரன்களிலும், ஒல்லி போப் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிவரை களத்தில் இருந்த பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்
இதற்கிடையே, இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் போடுமாறு அன்பு கட்டளையிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
விராட் கோலி விசில் அடித்து காட்டியதும் சென்னை ரசிகர்கள் ஆக்ரோஷமாக விசில் அடிக்க அரம்பித்தனர். கோலி, கேட்கல .. இன்னும் சத்தமா... என்று ரசிகர்களுக்கு பதில் அளித்தார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 227 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil