இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (புதன்கிழமை) முதல் பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெறுகிறது.
பெங்களூருவில் மழை - முதல் நாள் ஆட்டம் ரத்து
இந்த நிலையில், பெங்களுருவில் போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த தொடர் மழை பெய்து வரும் சூழலில், முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நாளை வழக்கம் போல் போட்டி காலை 9:30 மணிக்கு தொடங்கும். இருப்பினும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நாளைய தினமும் போட்டி நடைபெறுவதில் சந்தேகம் தான்.
களம் புகுந்த கோலி - குஷியான ரசிகர்கள்
இந்நிலையில், பெங்களூரில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியைக் காண ஏரளமான ரசிகர்கள் திரண்டனர். தொடர் மழை பெய்த சூழலில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்கும் நேரம் தள்ளிக் கொண்டே சென்றது. இதனிடையே,
இந்திய அணி வீரர்கள் தங்களை போட்டிக்கு தயார் நிலையில் வைத்திருக்க மைதானத்திற்கு உள்ளே இருக்கும் இடத்தில் வாரம்-அப் மற்றும் வலைப் பயிற்சி செய்ய முடிவு செய்தனர். அப்போது, மழையில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஹூடி அணிந்து, நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு மைதான ஊழியர்கள் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகளுடன் நிதானமாக களத்திற்குள் நுழைந்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/16/JbLQARSdf0t9mfDuFYud.jpg)
கோலி மற்றொரு புறத்திற்கு உள்ளே இருக்கும் பயிற்சி செய்யும் இடத்தை நோக்கி நடந்த நிலையில், அப்போது கோலியைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அவரை நோக்கி கோலி, கோலி என ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கோலியைத் தொடர்ந்து, இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் உட்புற பயிற்சி பகுதிக்கு சென்றனர். கோலி, ஜெய்ஸ்வால் மற்றும் சில இந்திய பேட்டர்களுக்கு இந்தியாவின் துணை ஊழியர்கள் த்ரோ-டவுன் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“