இங்கிலாந்து மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்துகின்றன.
முன்னதாக, இந்த தொடரில் நடந்த அரை இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா பிரட் லீ தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்டியது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 65 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, 255 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து, இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
வின்டேஜ் யுவராஜ்
இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்களை இந்திய தொடக்க வீரர் ராபின் உத்தப்பா (65 ரன்கள்) குவித்து இருந்தாலும், கேப்டன் யுவராஜ் சிங் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை பறக்க விட்டு ஆஸ்திரேலிய அணி பவுலர்களின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார். 59 ரன்களை சேர்த்த அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், யுவராஜ் சிங் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரிகளை விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“