முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் ராய்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் நேற்று வியாழக்கிழமை நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அதிரடியாக ஆடிய யுவராஜ் 59 ரன்களும், சச்சின் 42 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் சேவியர் டோஹர்ட்டி மற்றும் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 221 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 18.1 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பென் கட்டிங் 39 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஷபாஸ் நதீம் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த தொடரில் இன்று நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
7 சிக்ஸர் - யுவராஜ் மிரட்டல் அடி
இந்த நிலையில், இந்தப் போட்டியில் இந்தியாவுக்காக அதிரடியாக காட்டிய யுவராஜ் சிங் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். தற்போது அவர் சிக்ஸர்களை விளாசியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ், சேவியர் டோஹெர்டி வீசிய 7-வது ஓவரில் பவன் நேகி விக்கெட்டுக்குப் பின் களமாடினார். அந்த ஓவரின் 6.5-வது பந்தில் முதல் சிக்ஸரை பறக்கவிட்டார் யுவராஜ். அதன்பிறகு, சேவியர் டோஹெர்டி வீசிய 8.3 -வது ஒரு சிக்ஸர் விளாசினார்.
தொடர்ந்து ஸ்டீவ் ஓகீஃப் போட்ட 10.1-வது ஓவரில் சிக்ஸர் அடித்தார் யுவராஜ். இப்போது, பிரைஸ் மெக்கெய்ன் 13-வது ஓவரை வீச வந்தார். அவரது முதல் பந்தில் வெல்கம் சிக்ஸர் விளாசி வரவேற்றார் யுவராஜ். பிறகு அதே ஓவரில் 3-வது மற்றும் கடைசி பந்தில் சிக்ஸரை பறக்கவிட்டு 26 பந்துகளில் அரைசதம் அடித்து முடித்தார்.
இதன்பின்னர், யுவராஜ் சேவியர் டோஹெர்டி வீசிய 14.1-வது ஓவரில் சிக்ஸர் விளாசினார். அதே ஓவரின் 14.3-வது பந்தில் துரதிஷ்டவசமாக யுவராஜ் சிங் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனாலும், தனது 43 வயதில் மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 30 பந்துகளில், 1 பவுண்டரி, 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு 59 ரன்கள் எடுத்திருந்தார். அவரது இந்த ஆட்டத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
யுவராஜ் சிங், 2007-ல் நடந்த தொடக்க டி-20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்து மிரட்டி சாதனை படைத்தார். மேலும், சர்வதேச அரங்கில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். தற்போது ஒரே ஆட்டத்தில் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.