Vijay-hazare-trophy | tamilnadu-cricket-association: 22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு, ஜெய்ப்பூர், ஆமதாபாத், சண்டிகார், மும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகளில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் கால்இறுதியை எட்டும்.
காலிறுதி மோதல்
இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான காலிறுதி போட்டிகள் இன்று அரங்கேறியது. முதலாவது காலிறுதியில் பெங்கால் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹரியானா அரையிறுதிக்கு முன்னேறியது. 2வது காலிறுதியில் கேரளா அணியை வாரிச் சுருட்டிய ராஜஸ்தான் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3வது கால் இறுதியில் விதர்பாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து கர்நாடகா அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சனோசரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 4வது கால் இறுதியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்கள் எடுத்தது. பந்துவீச்சில் மிரட்டி எடுத்த வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 3 விக்கெட்டையும், மணிமாறன் சித்தார்த் மற்றும் அபராஜித் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 228 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தமிழக அணி 3 விக்கெட்டை மட்டும் இழந்து 43.2 வது ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்தது. அதிகபட்சமாக சதம் அடித்து மிரட்டிய பாபா இந்திரஜித் 98 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்தார். விஜய் சங்கர் 51 ரன்களும், பாபா அபராஜித் 45 ரன்களும் எடுத்தனர்.
இந்த அசத்தல் வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. வருகிற புதன்கிழமை (டிசம்பர் 13) நடக்கும் முதல் அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி ஹரியானா அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியானது ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்
திவ்யான்ஷ் சக்சேனா, ஜெய் கோகுல் பிஸ்டா, ஹர்திக் தாமோர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), சிவம் துபே, பிரசாத் பவார் (விக்கெட் கீப்பர்), ராய்ஸ்டன் டயஸ், ஷம்ஸ் முலானி, மோஹித் அவஸ்தி, தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான்
ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், என் ஜெகதீசன், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), பாபா அபராஜித், ஷாருக் கான், நிதிஷ் ராஜகோபால், மணிமாறன் சித்தார்த், வருண் சக்கரவர்த்தி, டி நடராஜன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“