Vijay Hazare Trophy Semifinal TN vs SAU Tamil News: 2021 – 2022ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர் விஸ்வராஜ் ஜடேஜா அரைசதம் கடந்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவருடன் மறுமுனையில் இருந்த விக்கெட் கீப்பர் வீரர் ஜாக்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் கடந்தார். அவர் 125 பந்துகளில் 11 பவுண்டரிகள் 4 சிக்ஸர் என விளாசி 136 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவருக்கு பின்னர் வந்த வாசவதா 57 எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறிய நிலையில், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 310 ரன்கள் சேர்த்தது. எனவே, தமிழ்நாடு அணிக்கு 311 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தமிழக அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
311 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தமிழ்நாடு அணியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் பாபா அபராஜித் சதமடித்து 122 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த வீரர்களில் பாபா இந்திரஜித் 50 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 70 ரன்களுடனும் அவுட் ஆனார்கள். மற்ற வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டமிழந்த நிலையில், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

தமிழ்நாடு அணி கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்று இருந்த நிலையில், களத்தில் இருந்த சாய் கிஷோர் – சிலம்பரசன் ஜோடியில் சாய் கிஷோர் பவுண்டரியை விளாசவே தமிழ்நாடு அணி திரில் வெற்றி பெற்றது. இந்த அசத்தலான வெற்றி மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக, இன்று காலை முதல் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஹிமாச்சல பிரதேசம் – சர்வீசஸ் அணிகள் மோதிய நிலையில், 77 ரன்கள் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியை வீழ்த்திய ஹிமாச்சல பிரதேசம் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
எனவே, வருகிற ஞாயிற்று கிழமை (டிசம்பர் 26ம் தேதி) நடக்கும் இறுதிப்போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியை தமிழ்நாடு அணி எதிர்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“