அம்பதி ராயுடு - விஜய் ஷங்கர் வாய்க்கா தகராறு நமக்கு தெரிந்த விஷயமே. ஆனால், எங்களுக்குள் அப்படி எந்தவொரு தகராறும் இல்லை என விஜய் ஷங்கர் மறுத்துள்ளார்.
விஷயம் என்னன்னா, இங்கிலாந்தில் வரும் மே30ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, அதில் அம்பதி ராயுடு இடம் பெறவில்லை. அணியில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் இளம் விஜய் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட்.
விஜய் ஷங்கர் தேர்வுக்கு சொல்லப்பட்ட காரணம், அவர் 'பவுலிங், பேட்டிங், பீல்டிங் என்று முப்பரிமாணங்களிலும் அவர் பயன்படுவார்' என்றது பிசிசிஐ.
அதைத் தொடர்ந்து, அம்பதி ராயுடு தானது ட்விட்டரில், "இப்போதுதான் உலகக் கோப்பை போட்டிகளைப் பார்க்க 3டி கிளாஸ்களை ஆர்டர் செய்தேன்' என்று பதிவிட, விஜய் ஷங்கரை கிண்டல் செய்யும் விதமாகவே அவ்வாறு ட்வீட் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டது. ராயுடுவும் இதுவரை அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், ஒரு தனியார் டிவி ஷோவில் கலந்து கொண்ட விஜய் ஷங்கர் இதுகுறித்து மனம் திறந்திருக்கிறார். அம்பதி ராயுடு ட்வீட் குறித்து பேசிய விஜய், "அணியில் தேர்வாகவில்லை என்றால் ஒரு கிரிக்கெட் வீரர் எவ்வளவு வேதனைப்படுவார் என்ற உண்மை எனக்கு தெரியும். வீரரின் மனநிலையில் இருந்து என்னால் அதை புரிந்து கொள்ளமுடிகிறது. தவிர, அவர் என்னை சுட்டிக் காட்டி அந்த ட்வீட் போடவில்லை என்பதும் எனக்கு தெரியும். அவர் என்ன மாதிரியான சூழ்நிலையில் இருந்திருப்பார் என்பதையும் நான் புரிந்து கொள்கிறேன். கிரிக்கெட்டர்கள் வாழ்க்கையில் இது சகஜம்" என்று கூறியிருக்கிறார்.
(சார்வால், அதுலாம் இருக்கட்டும். வார்ம் அப் மேட்ச் ஆடுறதுக்கு முன்னாடியே காயப்பட்டு வெளியே உட்கார்ந்து இருக்கீங்க... முதல்ல அதை கவனிங்க!)