இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைப்பதே அரிது. அதுவும் ஒருநாள் போட்டிகளில். சீனியர் வீரர்களே இப்போதெல்லாம், அவ்வப்போது உட்கார வைக்கப்பட்டு ரொட்டேஷன் முறையில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு தற்போது இந்திய அணியில் அடுத்தடுத்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்ட்யாவிற்கு சரியான மாற்றாக கேப்டன் விராட் கோலியும், கோச் ரவி சாஸ்திரியும் அவரை முழுமையாக நம்புவதன் வெளிப்பாடே இதற்கு காரணம்.
ஆனால், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விஜய் ஷங்கர் காட்டிய ஃபார்ம், நிச்சயம் அவர் சதம் கூட அடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் 46 ரன்களில் ரன் அவுட்டாக, கேப்டன் கோலி பெரும் அப்செட்.
பரிதாபம் என்னவெனில், அந்த ரன் அவுட், விஜய் ஷங்கரால் நேர்ந்தது இல்லை. கோலி மற்றும் விதியால் நேர்ந்தது.
ஆம்! 28வது ஓவரை வீசிய ஆடம் ஜம்பாவின் 5வது பந்தில் கோலி ஒரு நல்ல ஷார்ட் அடிக்க, அது நேராக மறுமுனைக்கு வேகமாக சென்றது.
சென்றது, ஆடம் ஜம்பாவின் விரல்களையும் உரசிச் செல்ல, நொடிப் பொழுதில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. இவை அனைத்தும், Non Strike-ல் நின்றுக் கொண்டிருந்த விஜய் ஷங்கர் கிரீசுக்குள் பேட்டை வைப்பதற்குள் நடந்து முடிய, 46 ரன்களுடன் சோகமாக வெளியேறினார்.
உண்மையில், இது சோகமான நிகழ்வு தான். 41 பந்துகளில், 5 பவுண்டர் மற்றும் 1 சிக்ஸருடன் விஜய் பக்கா கம்ஃபர்டபிள் Zone-ல் இருந்தார். ஆனால், இந்த ரன் அவுட் அவரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியையும் ஏமாற்றியது.
இதவரை ஆறு ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள விஜய் ஷங்கருக்கு இந்தப் போட்டியோடு சேர்த்து, இரு போட்டிகளில் மட்டுமே பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. கடந்த பிப்ரவரி 3ம் தேதி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தான் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியாகும்.
அந்தப் போட்டியில் 18 ரன்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து ஊசலாட, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த விஜய், 45 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார். அவரது முதல் அரைசதம் அப்போதே மிஸ் ஆனது.
அதற்குப் பிறகு இப்போது தான் மீண்டும் அவருக்கு பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதுவும், கேப்டனின் கண்களுக்கு எதிராக. ஆனால், இதிலும் அதே ரன் அவுட் எனும் எமன் விஜய் ஷங்கரின் அருமையான இன்னிங்சை நாசம் செய்துள்ளது.
ஆனால், இந்தப் போட்டியில் விஜய் வெளிப்படுத்திய பேட்டிங், அவரது உறுதி, எதிர்வரும் உலகக் கோப்பைத் தொடருக்கு ஹர்திக் பாண்டாவுடன் இங்கிலாந்திற்கு சேர்ந்தே பயணிப்பார் என்பதை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது!.
மேலும் படிக்க - இந்தியா vs ஆஸ்திரேலியா லைவ் கிரிக்கெட்