பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வந்த 33-வது ஒலிம்பிக் திருவிழா கடந்த 11 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியாவுக்கு 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்கள் கிடைத்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Thought she might die, says Vinesh Phogat coach on weight-cut before final
தகுதிநீக்கம்
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார். அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி நாட்டிற்கு பெருமை சேர்த்த நிலையில், வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுதலாக இருக்கும் காரணத்தை சுட்டிக்காட்டி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த வினேஷ் போகத், 'இனி என்னிடம் போராட சக்தியில்லை' என்று கூறி மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேல்முறையீடு
இருப்பினும், வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தை எதிர்த்து அவர் சார்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச மல்யுத்த சம்மேளம் ஆகிய அமைப்புகளுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், இறுதிப்போட்டிக்கு முன்புவரை எடை சரியாக இருந்த வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக நேற்று வெளியாகிய தீர்ப்பில் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தெரிவித்தது.
அஞ்சிய பயிற்சியாளர்
இந்த நிலையில், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு ஐந்தரை மணிநேர தீவிர எடைக் குறைப்பின் முடிவில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் "இறந்து போய் விடுவார்" என்று அஞ்சியதாக அவரது பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்துள்ளார்.
ஹங்கேரிய மொழியில் தனது ஃபேஸ்புக் பதிவில், பயிற்சியாளர் வோலர் அகோஸ் “அரையிறுதிக்குப் பிறகு, 2.7 கிலோ எடை அதிகமாக இருந்தது. நாங்கள் ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தோம், ஆனால் 1.5 கிலோ இன்னும் இருந்தது. பின்னர், 50 நிமிடங்களுக்கு பிறகு, அவர் மீது வியர்வை துளி கூட தோன்றவில்லை. வேறு வழியில்லை, நள்ளிரவு முதல் காலை 5:30 மணி வரை, வெவ்வேறு கார்டியோ இயந்திரங்கள் மற்றும் மல்யுத்த நகர்வுகளில், ஒரே நேரத்தில் முக்கால் மணிநேரம், இரண்டு மூன்று நிமிட ஓய்வுடன் வேலை செய்தார்.
பின்னர் அவர் மீண்டும் பயிற்சி தொடங்கினார். அவர் சரிந்து விழுந்தார். ஆனால் எப்படியோ அவரை எழுப்பினோம். அவர் ஒரு மணி நேரம் சானாவில் கழித்தாள். நான் வேண்டுமென்றே வியத்தகு விவரங்களை எழுதவில்லை. ஆனால் அவர் இறந்துவிடக்கூடும் என்று நினைத்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் பதிவிட்டு இருந்தார். பின்னர் இந்த பதிவை அவர் நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“