பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரியானா காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா அவரை விமான நிலையத்துக்கு சென்று வரவேற்றார்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) தலைவர் பி.டி.உஷா தன்னை சந்தித்தது தொடர்பாக வினேஷ் போகத் பகிர்ந்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் 53 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு அதிக எடை காரணமாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அதனையடுத்து, ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பாலி கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை நலம் விசாரிக்க இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா சென்றார். தொடர்ந்து, வினேஷ் போகத்தும், பி.டி.உஷாவும் இருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
ஆனால், இந்த புகைப்படங்கள் தனக்குத் தெரிவிக்காமல் கிளிக் செய்யப்பட்டதாகவும், புகைப்படம் எடுத்ததை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வினேஷ் போகத் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும்போது வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து செல்லும்போது, அந்த தருணத்தில் என்னுடன் நிற்பதாக எல்லோரிடமும் காட்டுவதற்காக என் அனுமதியின்றி புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளனர்.
உங்கள் ஆதரவை அவ்வாறு தெரிவித்திருக்க தேவையில்லை. இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னணி அரசியலில் நிறைய நடக்கிறது. என்னை மல்யுத்தத்தை விடவேண்டாம் என்று பலரும் கூறினர். நான் எதற்காக தொடர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“