ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மோசமான செயல்பாடு குறித்தி கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் 8 அணிகள் கலந்துக் கொண்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடிய 14 போட்டியில் 6ல் மட்டுமே வென்று 12 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. இந்த தொடரில் பெங்களூர் அணியின் ஆட்டம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது.
இதுக்குறித்து அந்த அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர்களிடம் மனம் உருகி மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
வீடியோவில் கோலி பேசியிருப்பது, “ இந்த சீசனில் எங்களின் செயல்பாடு பெருமை கொள்ளும் வகையில் இல்லை. நாங்கள் விளையாடிய விதத்தை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறோம். ரசிகர்களாகிய உங்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்ற தவறி விட்டோம்.
அதற்காக ஆழ்ந்த மன்னிப்பையும் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை புரிந்துள்ளோம். எப்போதுமே நாம் விரும்புவது மட்டுமே கிடைத்து விடுவதில்லை. செய்த தவறின் மூலம் பாடம் கற்றுள்ளோம். அடுத்த சீசனில் எப்படி விளையாட வேண்டுமென்பதை இப்போதே திட்டமிட்டுள்ளோம். கண்டிப்பாக அடுத்த வருடம் உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்” என்று மனம் உருகி பேசியுள்ளார்.