Virat-kohli | india-vs-south-africa: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) முதல் தொடங்கியது. 'பாக்சிங் டே' போட்டியாக செஞ்சுரியன் மைதானத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சுவதாக அறிவித்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனா இந்தியா 245 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 408 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக டீன் எல்கர் 185 ரன்களும், மார்கோ ஜான்சன் 84 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை கைப்பற்றினார். தொடர்ந்து 2வது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 131 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவியது.
புதிய உச்சத்தை தொட்ட கோலி
இந்நிலையில், 146 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் படைக்காத சாதனையை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்து புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தின் இரண்டாம் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது, விராட் கோலி மட்டும் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடினார். மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த அவர் 82 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அப்போது நடப்பாண்டில் சர்வதேச போட்டிகளில் அவர் அடித்த ரன்கள் 2,000-ஐ கடந்தது. இதன் மூலம் 7 வெவ்வேறு ஆண்டுகளில் 2,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2012 (2,186 ரன்கள்), 2014 (2,286 ரன்கள்), 2016 (2,595 ரன்கள்), 2017 (2,818 ரன்கள்), 2018 (2,735 ரன்கள்) மற்றும் 2019 (2,455 ரன்கள்) ஆகிய ஆண்டுகளில் 2,000 ரன்களை கோலி கடந்திருந்தார். 1877ல் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் விளையாடப்பட்டதிலிருந்து (அதிகாரப்பூர்வ சாதனையின்படி) இப்படியொரு சாதனையை வேறு எந்த வீரரும் எட்டவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“