worldcup 2023 | india-vs-afghanistan | virat-kohli: இந்திய மண்ணில் நடந்த 16வது ஐ.பி.எல் (2023) கிரிக்கெட் தொடர் சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அரங்கேறியது. இந்த தொடரில் மே 1ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முந்தைய போட்டியில் லக்னோவிடம் தோல்வியுற்ற பெங்களூரு அணி பதிலடி கொடுக்கும் விதமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் உடன் விராட் கோலி கைகுலுக்க செல்லும் போது, கோலியின் கையை இறுக பிடித்துக்கொண்டு அவருடன் வாய் தகராறில் ஈடுபட, பதிலுக்கு கோலியும் வாய் தகராறில் ஈடுபடுவார். இது மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும்.
இந்த சச்சரவு ஓய்ந்த சில நிமிடங்களில், லக்னோ வீரர் கைல் மேயர்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த கோலியுடன் லக்னோ அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் வார்த்தைப் போரில் இறங்குவார். அதற்கும் கோலி பதிலடி கொடுத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்ப்பார். இது மைதானத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இது தொடர்பான வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
மாம்பழ சண்டை
இதன்தொடர்ச்சியாக கோலி விளையாடி வரும் பெங்களூரு அணி தோல்வியுறும் போதெல்லாம், லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் மாம்பழம் புகைப்படத்தை பதிவிட்டு மறைமுகமாக கோலியை சாடி வந்தார். மும்பை அணிக்கு எதிராக பெங்களூரு தோல்வி கண்டபோது நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "மாம்பழம் நல்ல இனிப்பான மாம்பழம்" என்று பதிவிட்டார். இதற்கு அவரை கோலியின் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தும் வந்தார்கள்.
மேலும், நவீன் உல் ஹக் ஆடி வந்த லக்னோ அணி அடுத்த போட்டிக்கு விளையாட செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வந்தார்கள். ஐதராபாத்தில் விளையாடிபோது, அங்கு திரண்ட கோலியின் ரசிகர்கள் 'கோலி… கோலி…' என ஆரவாரம் செய்தனர். அதோடு டக்-அவுட்டில் அமர்ந்திருந்த கவுதம் கம்பீர் மீது கையில் கிடைத்த நட்டுகள், போல்ட்கள் போன்ற சிறிய பொருட்களை கொண்டு எறிந்தனர்.
இதேபோல், சென்னையில் லக்னோ அணி ஆடிய போது, பவுண்டரி லயனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த நவீன் உல் ஹக்கை ரசிகர்கள் சிலர் வம்புக்கு இழுத்தனர். அவரை குறிவைத்து விராட் கோலியின் பெயரை 'கோலி… கோலி…' என உச்சரித்து ஆரவாரம் செய்தனர். அப்போது அவர் 'நன்றாக கத்துங்கள், சத்தம் கேட்கவில்லை' என்பது போல் சைகை காட்டி இருந்தார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியது.
நட்பு பாராட்டிய நவீன் - கோலி
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் நேற்றைய இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் போதும் இந்த மாம்பழ சண்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. போட்டி நடந்த டெல்லி மைதானம் கோலியின் சொந்த மைதானம் என்பதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி, மைதானமே நிரம்பி வழிந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வந்த போதும், அவர் இந்தியாவுக்கு எதிராக பந்துவீச தொடங்கிய போதும் கடலலை போல் திரண்டிருந்த ரசிகர்கள் 'கோலி... கோலி...' என முழக்கமிட்டனர். அந்த முழக்கங்கள் விண்ணைப்பிளந்தன.
274 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை இந்திய அணி துரத்திய நிலையில், தொடக்க வீரர் இஷான் கிஷனின் விக்கெட்டுக்குப் பின் கோலி பேட்டிங் செய்ய களமாடினார். அப்போதும் ரசிகர்கள் சத்தம் எழும்பி ஆரவாரம் செய்தனர். இந்த கூச்சல்களுக்கு மத்தியில், பீல்டிங் செய்து கொண்டிருந்த நவீன் உல் ஹக் 26 ஓவரின் போது கோலியுடன் கை குலுக்கினார். அவருடன் கைகுலுக்கிய கோலி அவரது தோளின் மீது கைபோட்டு நட்பு பாராட்டினார்.
இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய நவீன் உல் ஹக், "ரசிகர்கள் தங்கள் சொந்த அணி கிரிக்கெட் வீரர்களுக்காக ஆரவாரம் செய்வார்கள். அதைத்தான் இன்றும் செய்தார்கள். இது அவரது (கோலி) சொந்த மைதானம். அவர் ஒரு நல்ல மனிதனர், ஒரு நல்ல வீரர். நாங்கள் இருவரும் கைகுலுக்கி கொண்டோம். அது மைதானத்தில் நடந்த சம்பவம். மைதானத்துக்கு வெளியே எதுவும் இல்லை. ரசிகர்கள் அதை பெரிதாக்குகிறார்கள். அவர்களைப் பின்தொடர்பவர்களுக்கு அந்த விஷயங்கள் தேவை. நாங்கள் அதை முடித்துக் கொண்டோம். பிறகு நாங்கள் கைகுலுக்கி கட்டிப்பிடித்தோம்." என்று கூறினார்.
நவீன் உல் ஹக் மற்றும் கோலி மைதானத்தில் நட்பு பாராட்டியது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள் இருவரின் பெருந்தன்மையையும் பாராட்டி நெகிழ்ந்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.