இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடருக்கான தொடக்கப் போட்டி வருகிற ஜூன் 20 முதல் ஹெடிங்லி லீட்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனை நியமிக்க தேர்வாளர்கள் முடிவு செய்தனர். அவர்களின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ) ஆதரவு தெரிவிக்கும் என 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி வெளியாகி 2 மணி நேரத்திற்குள், கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரோகித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை தொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Virat Kohli Test Retirement
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், "டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் இந்திய அணி தொப்பியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த வடிவம் என்னை அழைத்துச் செல்லும் பயணம் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. இது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, மேலும் நான் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது" என்று கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், "#269, சைனிங் ஆஃப்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) தெரிவித்து இருந்தார். ஆனால், உயர் அதிகாரிகள் அவரின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது. இந்த சூழலில் கோலி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
36 வயதான கோலி, ஜூன் 20, 2011 ஆம் ஆண்டு கிங்ஸ்டனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 30 சதம், 31 அரைசதங்களுங் 9230 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் அவர் 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்துள்ளார்.
2010 மற்றும் 2019 -க்கு இடையில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேனாக கோலி திகழ்ந்தார். அந்தக் காலகட்டத்தில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரன் குவித்தவர்களில் கோலி மூன்றாவது இடத்தில் இருந்தார், 54.97 சராசரி மற்றும் 27 சதங்களுடன் 7202 ரன்களைக் குவித்தார். அந்தக் காலத்தில் எந்தவொரு வீரரும் எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.
இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் கொரோனாவுக்குப் பிறகு, அவரது ஸ்கோர் வெகுவாகக் குறைந்தது. அதன்பிறகு கோலி 68 இன்னிங்ஸ்களில் மூன்று சதங்கள் மற்றும் ஒன்பது அரைசதங்களுடன் 2028 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்செயலாக, 2020 முதல் குறைந்தது 2000 ரன்கள் எடுத்த 24 டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் கோலியின் 30.72 சராசரி மிகக் குறைவு ஆகும்.
இந்திய டெஸ்ட் அணிக்கு மிகப்பெரிய வெற்றி
இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி, 210 இன்னிங்ஸ்களில் 9230 ரன்களுடன், இந்திய பேட்ஸ்மேன்களில் அவர் நான்காவது இடத்தில் உள்ளார், சச்சின் டெண்டுல்கர் (15,921), ராகுல் டிராவிட் (13,265), மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122) ஆகிய புகழ்பெற்ற மூவருக்கும் பின்னால் 46.85 சராசரியில் 9230 ரன்களுடன் அவர் இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனியிடமிருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கோலி ஏற்றுக்கொண்ட கோலி, எட்டு ஆண்டுகள் வெற்றிகரமான இந்திய அணியை வழிநடத்தினார். 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த கோலி, இந்தியாவை 40 டெஸ்ட் வெற்றிகளுக்கு வழிநடத்தினார், இதன் மூலம் அவர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெற்றிகரமான இந்திய டெஸ்ட் கேப்டனாக ஆனார். சர்வதேச கேப்டன்களில் கிரேம் ஸ்மித் (53), ரிக்கி பாண்டிங் (48) மற்றும் ஸ்டீவ் வா (41) மட்டுமே அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய அணியை வழிநடத்தும் போது கோலி பேட்டிங்கிலும் ஆதிக்கம் செலுத்தினார், கேப்டனாக 113 இன்னிங்ஸ்களில் 5864 என்கிற அசத்தலான ரன்களை குவித்தார், இது அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் நான்காவது சிறந்த ரன்களாகும். தென் ஆப்பிரிக்காவின் ஸ்மித் (25) மட்டுமே டெஸ்ட் கேப்டனாக கோலியை (20) விட அதிக சதங்களை பதிவு செய்தார்.
2024 பார்டர்-கவாஸ்கர் டிராபியை பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதத்துடன் தொடங்கிய போதிலும், கோலி தனது ஆட்டத்திற்கு இடையூறாக மீண்டும் மீண்டும் கேட்ச்-பின்னால் ஆட்டமிழக்கச் செய்யும் முறையால் அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் சேர்க்க திணறினார். அந்தத் தொடரில் அவர் 193 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் எட்டு ஆட்டமிழப்புகளில், கோலி ஏழு முறை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீச்சுகளில் அவுட் ஆனார்.