அடிலைடில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று சாதித்தது. இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணி முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில், டெஸ்ட் தொடரில் முதல் போட்டியிலேயே வெற்றிப் பெற்றது.
அதுமட்டுமின்றி, ஒரே ஆண்டில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப் பெற்ற இந்திய அணியின் முதல் கேப்டன் எனும் பெருமையை விராட் கோலி பெற்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி, பெர்த் நகரில் வரும் டிசம்பர் 14ம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில், இன்று தனது முதல் திருமண ஆண்டை விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா ஜோடி கொண்டாடியது. உலகம் முழுக்க உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுதான் இன்று ஹாட் டாபிக். ஆனால், அதையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு, ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, இந்திய அணி இன்று பெர்த் கிளம்பிச் சென்றது. பொதுவாக, உயர்தர கிளாஸ் கொண்ட விமான டிக்கெட்டுகளையே வீரர்களுக்காக பிசிசிஐ பதிவு செய்யும். வீரர்களுக்கு அலுப்பு, களைப்பு தெரியக் கூடாது என்று அவ்வாறு புக் செய்யப்படுவதுண்டு. ஆனால், சில காரணங்களால், பெர்த் செல்லும் விமானத்தில் அப்படி டிக்கெட் புக் செய்யப்படவில்லை. எகானமி கிளாசில் தான் பயணம் செய்தார்கள்.
அதேசமயம், விராட் - அனுஷ்கா ஜோடிக்கு பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த விராட் கோலி, தங்களது பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்டுகளை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அளித்துவிட்டார்.
அவர்கள் களைப்பு இன்றி பயணம் செய்ய வேண்டியது முக்கியம் என்பதால், அவர்களை பிஸ்னஸ் கிளாசில் பயணம் செய்ய வைத்துள்ளார்.
இதனை, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான மைக்கேல் வாகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், "நானே இதற்கு சாட்சி. தங்களது பிஸ்னஸ் கிளாஸ் டிக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கொடுத்திருக்கிறார் கேப்டன் விராட் கோலி. பவுலர்கள் ரிலாக்ஸ் அடையவில்லை எனில், ஆஸ்திரேலியா மிக அபாயகரமான அணியாக மாறிவிடும். இதனை கேப்டன் மிகச் சரியாக அணுகி இருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.