Virat Kohli, Anushka Sharma pledge support to PM Relief Fund
கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை சமாளிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
Advertisment
சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 33,000க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார்கள். இந்தியாவில், நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14 வரை அமலில் இருக்கும்.
இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் பொது நிவாரண நிதிக்குக் குறிப்பிட்ட தொகையைத் தானும் அனுஷ்கா சர்மாவும் வழங்கியுள்ளதாக இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். மக்கள் படும் துயரங்களைக் கண்டு மனம் உடைந்துள்ளோம். நாங்கள் அளிக்கும் நிவாரண நிதி அவர்களுடைய வலியை ஓரளவு போக்கும் என நம்புகிறோம் என்று கோலி கூறியுள்ளார்.
Anushka and I are pledging our support towards PM-CARES Fund & the Chief Minister's Relief Fund (Maharashtra). Our hearts are breaking looking at the suffering of so many & we hope our contribution, in some way, helps easing the pain of our fellow citizens #IndiaFightsCorona
கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பட நடிகர்கள் நிவாரண நிதியாக வழங்கும் தொகை குறித்து சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவதால் தான் வழங்கிய தொகை எத்தனை என்று விராட் கோலி குறிப்பிடவில்லை.
குறிப்பாக, முன்னாள் இந்திய கேப்டன் தோனி ரூ.1 லட்சம் மட்டுமே நிவாரண நிதியாக கொடுத்தார் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவ அதனை காட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டார் தோனியின் மனைவி சாக்ஷி. இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்ப்பதற்கே தொகை குறித்த விவரத்தையே சொல்லாமல் விட்டிருக்கிறார் கோலி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil