Virat Kohli-Gautam Gambhir Interviewing Each Other: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில், அவர் தனது பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து, ஜூலை 9 ஆம் தேதி இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமனம் செய்யப்பட்டார்.
அவரது தலைமையிலான இந்திய அணி முதல் முறையை இலங்கையில் நடந்த 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, ஒரு நாள் தொடரை இலங்கையிடம் 2-0 எனப் பறிகொடுத்தது.
அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வியாழக்கிழமை (செப்.19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோதல்
இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகிய இருவர் மட்டும் பங்கேற்ற நேர்காணல் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, விராட் கோலி கவுதம் கம்பீரிடம் களத்தில் நடக்கும் சச்சரவுகள் குறித்து கேட்டுள்ளது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், 2016-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு அவர் ஐ.பி.எல் தொடரில் ஆதிக்கம் செலுத்தினார். அவரது தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன்பிறகு, அரசியலிலும் அடியெடுத்து கம்பீர், 2019 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி கிழக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
இதையடுத்து, மீண்டும் கிரிக்கெட் பக்கம் தனது கவனத்தை திருப்பிய அவர், கடந்த 2022 சீசனில் ஐ.பி.எல் தொடரில் புதியதாக சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசராக கம்பீர் பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலில் லக்னோ அடுத்த 2 சீசன்களில் பிளே ஆஃப்க்குள் நுழைந்தது. இந்த சூழலில் தான், கடந்த 2023 சீசனின் போது, அவருக்கும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலிக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
நவீன் உல் ஹக் -ஆல் ஏற்பட்ட இந்த மோதலில், ஆடுகளத்திற்குள் கம்பீர் - கோலி ஆகிய இருவரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அத்துடன், லக்னோ அணியுடன் கம்பீர் சென்ற மைதானங்கள் முழுதும் அவருக்கு எதிரான முழக்கங்கள் ஒலித்தன. ஐதராபாத்தில் கோலி ரசிகர்கள் டக்-அவுட்டில் அமர்ந்திருந்த கம்பீரை நோக்கி, கையில் கிடைத்தவற்றைக் கொண்டு எறிந்தனர். இதேபோல், நவீன் உல் ஹக் -வும் கோலி ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டார். மேலும், சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
சமரசம்
ஆனால், இந்த ஆண்டு நடந்த தொடரின் போது கம்பீர் - கோலி - நவீன் உல் ஹக் ஆகிய மூவரும் சமரசம் செய்து கொண்டனர். அப்போது இது பற்றிய பேசிய கோலி, "எனது நடத்தையால் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். நான் நவீனை கட்டிப்பிடித்தேன், மறுநாள் கவுதி பாய் (கவுதம் கம்பீர்) வந்து என்னைக் கட்டிப்பிடித்தார். உங்கள் மசாலா முடிந்துவிட்டது, அதனால் நீங்கள் கொந்தளிக்கிறீர்கள். நாங்கள் இனி குழந்தைகள் இல்லை," என்று கூறினார்.
கவுதம் கம்பீர் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், அவருடனான தனது கடந்த கால கசப்பான சம்பவங்களை புறந்தள்ளிவிட்டு, இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கம்பீருடன் இணைந்து செயல்பட தயார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பி.சி.சி.ஐ) கோலி உறுதியளித்தார்.
அதிர்ந்த கோலி
இந்த நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் முதல் முறையாக கேமரா முன் தோன்றி, நேர்காணல் மூலம் தங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், கோலியும் கம்பீரும் கடந்த காலத்தில் எதிரணி வீரர்களுடன் களத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்களை குறிப்பிட்டு பேசிக் கொண்டனர். களத்தில் ஒரு வீரருடன் தகராறில் ஈடுபடும் போதெல்லாம் அவர் எப்படி நடந்து கொள்கிறார்?, அவருக்குள் என்ன நிகழ்கிறது? என்பது போன்ற கேள்விகளை கம்பீரிடம் கோலி எழுப்புகிறார். ஆனால், கம்பீரின் பதில் கோலிக்கு ஆச்சரியமூட்டும் வகையில் இருக்கிறது.
வீடியோவில் விராட் கோலி கவுதம் கம்பீரிடம், "நீங்கள் பேட்டிங் செய்யும்போது, எதிரணியினருடன் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபடுகிறீகள். அது உங்கள் கையை மீறிச் செல்கிறது. அதனால் நீங்கள் அவுட் ஆகிவிடலாம் என்று நினைப்பீர்களாக? அல்லது அதனை ஊக்கமாக எடுத்துக்கொள்வீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர், "என்னை விட நீங்கள் தான் அதிக வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளீர்கள். அதனால், அந்த கேள்விக்கு என்னால் முடிந்ததை விட உங்களால் சிறப்பாக பதில் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன்." என்று கூறினார்.
அப்போது, சிரித்துக் கொண்டே கோலி, "நான் சொல்வதை ஒத்துக்கொள்ளும் ஒருவரைத் தான் தேடுகிறேன். தவறு என்று சொல்ல வரவில்லை. குறைந்தபட்சம் யாராவது அதைப் பற்றி சொல்ல வேண்டும். ஆம், களத்தில் இப்படித்தான் நடக்கும்" என்று அவர் கூறுகிறார்.
A Very Special Interview 🙌
— BCCI (@BCCI) September 18, 2024
Stay tuned for a deep insight on how great cricketing minds operate. #TeamIndia’s Head Coach @GautamGambhir and @imVkohli come together in a never-seen-before freewheeling chat.
You do not want to miss this! Shortly on https://t.co/Z3MPyeKtDz pic.twitter.com/dQ21iOPoLy
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.