இந்திய - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக தடைபடவே, இந்திய கேப்டன் கோலி, கயானா மைதானத்தில் ரசிகர்களின் இசைக்கு நடனமாடிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, டுவென்டி 20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டுவென்டி 20 தொடரை 3-0 என்ற கணக்கில் அலேக்காக இந்தியா வென்றது. ஒருநாள் தொடரையும் வெல்லும் முனைப்பில், தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி, கயானா மைதானத்தில் நேற்று ( ஆகஸ்ட் 8ம் தேதி) நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களாக நடக்க வேண்டிய போட்டி, வெஸ்ட் இண்டீஸ் அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதன்காரணமாக, போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னரும் மழை தொடர்ந்தது. பின் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னரும் மழை தொடர்ந்ததன் காரணமாக, போட்டி கைவிடப்படுவதாக அம்பயர்கள் தெரிவித்தனர்.
போட்டி நடைபெறாத சோகத்தை மறப்பதற்காக, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள், தாங்கள் கொண்டுவந்த இசை வாத்தியங்களை இசைத்தபடி இருந்தனர். அந்த இசை, மைதானம் முழுவதும் தொடர்ந்து எதிரொலித்துக்கொண்டே இருந்தது. திடீரென இந்த இசைக்கு, இந்திய கேப்டன் கோலி நடனமாட துவங்கினார். இவருடன் புயல் கெயிலும் உடன் சேர்ந்து ஆடினார். இவர்கள் ஆடுவதை பார்த்த கேதர் ஜாதவும் இணைந்து நடனமாடினார். உள்ளூர் இசைக்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் நடனமாடுவதை பார்த்த ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் திளைத்தனர். கோலி நடனமாடிய வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.