ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நாடடைபெற்று வருகிறது. இத்தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நேற்று வியாழக்கிழமை முதல் தொடங்கி நடக்ககிறது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கி நடக்கும் ஆட்டத்தில் டெல்லி - ரயில்வே அணிகள் மோதி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் கேப்டன் ஆயுஷ் பதோனி தலைமையிலான டெல்லி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ரயில்வே அணி 67.4 அனைத்து விக்கெட்டையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக உபேந்திர யாதவ் 95 ரன்களும், கரண் சர்மா 50 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக நவ்தீப் சைனி 3 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சில் ஆடி வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்தது. யாஷ் துல் 17 ரன்களும், சனத் சங்வான் 9 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். ரயில்வே அணியை விட டெல்லி அணி 200 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.
இந்த நிலையில், இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் மதிய உணவு இடைவேளையின் போது டெல்லி அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. சுமித் மாத்தூர் 28 ரன்னுடனும், ஆயுஷ் படோனி 52 ரன்னுடனும் எடுத்து களத்தில் உள்ளனர். ரயில்வே அணியை விட டெல்லி அணி 73 ரன்கள் பின்தங்கியுள்ளது.
கோலி அவுட்
இந்நிலையில், டெல்லி அணிக்காக நட்சத்திர வீரர் விராட்கோலி 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கி இருக்கிறார். இந்தப் போட்டியை நேரில் பார்க்க அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்ட சூழலில், நேற்று முதல் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள், கோலியை பார்க்க வேண்டும் என்பதற்காக அருண் ஜெட்லீ மைதானத்தில் திரண்டு வந்தனர்.
இந்த நிலையில், கோலி டெல்லி வீரர் யாஷ் துல் விக்கெட்டுக்குப் பின் பேட்டிங் ஆட களமாடினார். அப்போது, மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டியது. அவர்களது ஆரவாரத்துடனும், உற்சாக வரவேற்புடனும் கோலி பேட்டிங் ஆட ஆடுகளம் வந்தார்.
கோலி 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியை விரட்டினார். அப்போது, ரசிகர்கள் அவரை மேலும் அடித்து நொறுக்க உற்சாகப்படுத்தினர். ஆனால், கோலி 15-வது பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்து கோலிக்கு பின்புறம் இருந்த ஆஃப் ஸ்டெம்பை பதம் பார்த்தது. இதனால் பரிதமாக பெவிலியனுக்கு நடையைக் கட்டினார் கோலி. அவர் ஆட்டமிழந்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் வீட்டுக்கு நடையைக் கட்டினார்.