இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சமர்பித்துள்ளார்.
இந்தியா வெற்றி:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட், டிரென்ட் பிரிட்ஜில் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோல்விகண்டதைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தால் 203 ரன்கள் வித்யாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி வழக்கம் போல் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி இருந்தார். 5 ஆவது நாள் ஆட்டமான இன்று இந்தியா வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலி (103) ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அப்போது விருது வாங்க மேடைக்கு சென்ற அவரிடன் நெறியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்த் விராட் , “ இந்தியாவின் இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வெற்றியை நாங்கள் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்பிக்கிறோம்.
கேரளாவில் மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இது மிகவும் கடினமான நேரம்” என்று கூறினார். கோலியின் இந்த அறிவிப்பின் போது அரங்கத்தில் இருந்த பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
அன்று ரஹானே இன்று கோலி :
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மாநகரம் வெள்ளத்தால் மூழ்கியது.அப்போது இந்தியா - தென் ஆப்பிரிக்க இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரஹானே, இந்த வெற்றியை சென்னை மக்களுக்கும், அவர்களுக்கு உதவும் ராணுவ வீரர்களுக்கும் அர்பணிப்பதாக கூறினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஆக.30 ஆம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.