இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங் செய்த நிலையில், முதல் இன்னிங்சில் ஆடிய இந்தியா 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும், ஜெய்ஸ்வால் 56 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் ஆடிய வங்கதேசம் 149 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களுடன் தடுமாறி வருகிறது. கில் 33 ரன்களுடனும், பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
டி.ஆர்.எஸ் கோட்டை விட்ட கோலி
இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடிய போது, ஜெய்ஸ்வால் விக்கெட்டுக்குப் பின் நட்சத்திர வீரர் விராட் கோலி பேட்டிங் செய்ய களம் புகுந்தார். 2 பவுண்டரிகளை துரத்திய கோலி 17 ரன் எடுத்த போது மெஹிதி ஹசன் மிராஸ் சுழலில் சிக்கினார். மெஹிதி ஹசன் கோலி அவுட் என கள நடுவரிடம் அப்பீல் செய்தார். கள நடுவரான ரிச்சர்ட் கெட்டில்பரோ அவுட் என கையை உயர்த்தினார்.
இதனைப் பார்த்து பதறிப்போன கோலி டி.ஆர்.எஸ் எடுப்போமா வேணாமா என்பது போல் குழம்பி நிலையில் இருந்தார். அப்போது, நான்-ஸ்ட்ரைக்கர் என்ட்டில் இருந்த கில்-லிடம் எதோ பேசினார். அவர் டி.ஆர்.எஸ் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவுட் தான் என்பது போல் நினைத்துக் கொண்டு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஆனால், டி.வி ரீ-பிளேவில் மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய பந்து கோலியின் பேடை தட்டிய பிறகு அவரது பேட்டிலும் லேசாக உரசி சென்றது. இது மிகவும் தெளிவாக அந்த ரீ-பிளேவில் தெரிந்தது. இதனை உணராத கோலி தான் அவுட் என நினைத்து வெளியேறினார். டி.வி ரீ-பிளேவைப் பார்த்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, கோஹ்லி ரிவியூவைத் தேர்வு செய்யாதது குறித்து எரிச்சலடைந்தார். அவரது இந்த ரியாக்சன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல், கோலி தவறு செய்வதைப் பார்த்த நடுவர் ரிச்சர்ட் கெட்டெபரோ களத்தில் தனது சிரிப்பை வெளிப்படுத்தினார். அவர் தனது தலையைக் கீழே குனிந்தவாறு சிரிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரின் இந்த ரியாக்சனும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“