இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதிய 3வது ஒருநாள் போட்டி, புனேவில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஷாய் ஹோப் 95 ரன்களும், இறுதிக் கட்டத்தில் ஆஷ்லே நர்ஸ் 22 பந்தில் 40 ரன்கள் விளாச, 283 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், ரோஹித் 8 ரன்னில் அவுட்டாக, தவான் 35 ரன்களில் வெளியேறினார். ஆனால், சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி, தனது 38வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஒருநாள் தொடரில், முதல் மூன்று போட்டியிலும் சதமடித்து ஹாட்ரிக் சதம் விளாசி அசத்தினார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சதம் அடித்த முதல் வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார்.
ஆனால், மறுபக்கம் வீரர்கள் யாரும் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. தோனி 7 ரன்னிலும், ரிஷப் பண்ட் 24 ரன்னிலும், ராயுடு 22 ரன்னிலும் அவுட்டானார்கள்.
கோலியை மட்டும் இந்தியா நம்பியிருக்க, அவரும் 107 ரன்களில், சாம்யூல்ஸ் பந்தில் போல்டானார்.
இறுதியில், இந்திய அணி 47.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-1 என வெஸ்ட் இண்டீஸ் தனது கணக்கை தொடங்கியுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் சதம் அடித்த வீரர்களின் பட்டியல்:
குமார் சங்கக்காரா (4)
ஜாகிர் அப்பாஸ்
சயீத் அன்வர்,
கிப்ஸ்
ஏபி டி வில்லியர்ஸ்
குயிண்டன் டி காக்
ராஸ் டெய்லர்
பாபர் அசம்
ஜானி பேர்ஸ்டோ
விராட் கோலி
இந்தியாவில் விராட் கோலியின் கடைசி நான்கு ஒருநாள் போட்டிகளின் ரன்கள்:
113(106) v நியூசிலாந்து, கான்பூர்
140(107) v WI, குவஹாத்தி
157(129)*v WI, விசாகப்பட்டினம்
107(119)* WI, புனே
விராட் கோலி சதமடித்தும் தோற்ற ஆட்டங்கள்:
சேஸிங்கில் மொத்தம் 23 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளார். இதில், நேற்றைய ஆட்டத்தையும் சேர்த்து, மூன்று போட்டிகளில் இந்தியா தோற்றுள்ளது.
123(111) vs நியூசிலாந்து, நேப்பியர், 2014
106(92) vs ஆஸ்திரேலியா, கான்பெரா, 2016
107(119) vs வெஸ்ட் இண்டீஸ், புனே, 2018
நடப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கு கிடைத்த முடிவுகள்:
இந்தியா வெற்றி,
டிரா,
இந்தியா தோல்வி
வெஸ்ட் இண்டீஸ் ஆர்ப்பாட்டமே இல்லாமல், இந்தியாவை டாமினேட் செய்து வருகிறது என்பதே உண்மை.