உலகின் ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்படும் விராட் கோலிக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கவே கூடாது. ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தோல்விப் போட்டிகளில் இடம் பெற்ற வீரர் என்கிற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் அவர்.
12-வது ஐ.பி.எல். போட்டிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை மோதிய 5 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/rcb-ipl-2019....-300x197.jpg)
நேற்று பெங்களூருவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அபாரமாக ஆடி, 205 ரன்களை குவித்தது. இதில் விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணிக்கு கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் தேவைப்பட்டன. தனி நபர் ராணுவம் போல 7 சிக்சர்களை விளாசிய ஆந்த்ரே ரஸ்ஸெல் 48 ரன்கள் (13 பந்துகள்) குவித்து கொல்கத்தாவை வெற்றி பெற வைத்தார்.
விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஸ்டோனிஸ், மொயின் அலி, பார்த்திவ் படேல் என நல்ல வீரர்களை கைவசம் வைத்திருந்த நிலையிலும் பெங்களூரு அணியின் தோல்வி ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தும் விராட் கோலி, ஐ.பி.எல் தொடரில் தோல்விகளை சந்திப்பதும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 168 போட்டிகளில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். அதில் 86 போட்டிகளில் அவரது அணி தோல்வியை தழுவியிருக்கிறது. இதன் மூலமாக ஐ.பி.எல் வரலாற்றில் அதிக தோல்விகளில் இடம் பெற்ற வீரர் என்கிற மோசமான சாதனை அவர் வசமாகிறது.
அதேசமயம் ஐ.பி.எல். போட்டிகளில் தனிநபர் ரன் குவிப்பில் 5110 ரன்களுடனும் கோலி ‘டாப்’பில் இருக்கிறார். அடுத்தடுத்த ஆட்டங்களில் பெங்களூரு அணி தனது முழுத் திறமையை வெளிப்படுத்துமா? என்று பார்க்கலாம். நேற்றைய தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கோலி, ‘நாங்கள் முதலில் இருந்த நிலைக்கு, கூடுதலாக 20 முதல் 30 ரன்கள் எடுத்திருக்கலாம். எனினும் கடைசி 4 ஓவர்களில் 66 ரன்களுக்குள் முடிக்க இயலாவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது’ என வேதனையுடன் கூறினார்.