/indian-express-tamil/media/media_files/2025/02/07/N363belEsMuPxXEoVdVs.jpg)
உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்து 500+ ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்கிற பெருமையும் பெற்றார் ஷ்ரேயாஸ்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், முதலில் டி20 தொடர் நடைபெபெற்ற நிலையில், தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று வியாழக்கிழமை நாக்பூரில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், தொடரில் இந்தியா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. அடுத்ததாக, இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது.
களமிறங்கும் கோலி
இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆடவில்லை. 'இந்த ஆட்டத்தில் துரதிருஷ்டவசமாக விராட் விளையாடவில்லை. அவருக்கு நேற்று இரவு முழங்கால் பிரச்சனை ஏற்பட்டதால், அவர் இந்தப் போட்டியில் ஆடாமல் ஓய்வு எடுத்து வருகிறார்' என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோலியின் காயம் முழுவதும் குணமடைந்து விட்டதாகவும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு உடற்தகுதியுடன் இருப்பார் என்றும், இப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பயிற்சியின் போது அவரது வலது முழங்கால் நன்றாக இருந்தது, ஆனால் நாங்கள் ஹோட்டலுக்குத் திரும்பியதும், அது வீங்கியது.இருந்தாலும் அது மோசமாகத் தெரியவில்லை. அவர் கட்டாக் ஒருநாள் போட்டியில் விளையாடுவார்." என்று இந்திய அணியில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தலைவலி
இந்நிலையில், விராட் கோலி காயத்தில் இருந்து மீண்டுள்ளது கேப்டன் ரோகித் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோருக்கு பெரும் தலைவலியை கொடுக்க உள்ளது. முதலாவது போட்டியில் கோலி இல்லாத நிலையில், அவரது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடினார். மிகச் சிற்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் விளாசி அசத்தினார். மேலும், 36 பந்துகளில் 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்தார். அவரது தரமான ஆட்டத்தை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ஷ்ரேயாஸ் கடந்த 2023 உலகக் கோப்பையில் இதே 4-வது இடத்தில் இறங்கி தான் 500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து இருந்தார். மேலும், உலகக் கோப்பையில் 4-வது இடத்தில் இறங்கி பேட்டிங் செய்து 500+ ரன்கள் எடுத்த முதல் இந்தியர் என்கிற பெருமையும் பெற்றார். இத்தகைய சூழலில், அடுத்த ஆட்டத்தில் கோலி ஆடும் லெவன் அணிக்குள் வந்தால், யார் வெளியேறுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அணியில் நேற்று அறிமுக வீரராக களமாடி தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ஷ்ரேயாஸ் ஆகிய இருவரில் யாரை தேர்வுக்குழு வெளியேற்றப் போகிறது என்று ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். ஷ்ரேயாஸ் தனது சிறப்பான ஃபார்மில் தொடர்ந்து வருகிறார். அதேநேரத்தில், அறிமுக வீரரான ஜெய்ஸ்வாலுக்கு தொடர் வாய்ப்பு வழங்க வேண்டும். இருவருக்கு ஆதரவராக பலரும் பேசி வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், கம்பீர் யாரை அணியில் சேர்த்துக் கொள்வார் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.