இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், தென்.ஆ. 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும், கேப்டன் கோலி உட்பட பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
இரண்டாம் டெஸ்ட் போட்டி, வரும் ஜனவரி 13ம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில், முதல் டெஸ்ட்டில் இந்திய அணியை சரித்த தென்.ஆ., பவுலர் பிலாந்தர் கூறுகையில், "விராட்கோலி மிகவும் அருமையான அதிரடி ஆட்டக்காரர். அவரை வீழ்த்துவதுதான் எங்களது இலக்காக இருந்தது. விராட்கோலியை தொடக்கத்திலேயே அவுட் செய்து விட்டால் எங்களுக்கு வெற்றி எளிது என்று கணித்தோம்.
அதன்படியே இரண்டு இன்னிங்சிலும் அவரை விரைவில் அவுட் செய்தோம். விராட் கோலிக்கு தொடர்ந்து அவுட் ஸ்விங் பந்துகளையே வீசினேன். அதில் ஒரு பந்தில் அவர் சிக்கி விட்டார்" என்றார்.
இதே போன்று, தென்னாப்பிரிக்கா பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் கூறுகையில், "வேகப்பந்து வீச்சாளர்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற மனநிலையுடன் செயல்படக்கூடிய பயிற்சியாளர் நான். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் போது அணியின் கலவை சரியாக இருக்கிறதா? என்பதை முதலில் பார்க்க வேண்டும். எதிர்வரும் டெஸ்ட் போட்டிக்கான சீதோஷ்ண நிலையும் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உகந்த வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
அது கைகூடாவிட்டால் வேறு வழியை கையாள வேண்டும். எதுவாகிலும் இந்த தொடர் முழுவதும் எப்படி 4 வேகப்பந்து வீச்சாளர்களை களத்திற்கு கொண்டு வருவது என்பதை தான் கவனத்தில் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.