Virat-kohli | worldcup | thiruvananthapuram | indian-cricket-team | netharlands: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.
அக்டோபர் 5ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கோலி இல்லை
இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி திருவனந்தபுரம் சென்றுள்ளது. இந்த நிலையில், இந்த போட்டிக்காக திருவனந்தபுரம் சென்ற இந்திய அணியில் முன்னாள் கேப்டன் விராட் கோலி இல்லை. அதாவது அவர் இந்திய வீரர்களுடன் சேர்ந்து பயணப்படவில்லை.
கிரிக்பஸ் இணைய பக்கத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறப்பு விமானத்தில் கவுகாத்தியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இந்திய அணி பயணம் செய்தது என்றும், ஆனால், பயணம் செய்த இந்திய அணியில் கோலி இல்லை. சொந்த காரணமாக விடுப்பு எடுத்த அவர் கவுகாத்தியில் இருந்து மும்பைக்குத் திரும்பினார் என்றும் கூறியுள்ளது.
இருப்பினும், திங்கட்கிழமை மாலை திருவனந்தபுரத்தில் கோலி இந்திய அணியுடன் இணைவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், நெதர்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி களமாடுவாரா என்கிற கேள்வி ரசிகர்களை தொற்றிக்கொண்டுள்ளது.
மழை மிரட்டல்
இந்தியா - நெதர்லாந்து அணிகளின் முந்தைய பயிற்சி ஆட்டங்களைப் போலவே, நாளை செவ்வாய்க்கிழமையும் மழை அச்சுறுத்தல் உள்ளது. கடந்த சனிக்கிழமை நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நெதர்லாந்தின் பயிற்சி ஆட்டமும் இரண்டாவது இன்னிங்ஸின் போது மழையால் பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இருப்பினும், டாஸ் முடிந்த சிறிது நேரத்திலேயே கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நகரம் இருண்ட மேகங்களால் சூழப்பட்டது, இதன் விளைவாக, போட்டி கைவிடப்பட்டது.
திருவனந்தபுரத்தின் நாளைய வானிலை அறிவிப்பை பொறுத்தவரையில், "மேகமூட்டத்துடன் லேசான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. 96 சதவீதம் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. இடியுடன் கூடிய மழைக்கு 46 சதவீதம் வாய்ப்புள்ளது." என அக்யூவெதரின் அறிக்கை கூறுகிறது. இதுவரை, மழை காரணமாக 3 பயிற்சி ஆட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு திருவனந்தபுரத்தில் நடந்தன. தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் மாற்றும் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து டை 23 ஓவர்கள் போட்டியாக குறைக்கப்பட்டது, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்திய அணியின் முதல் பயிற்சி ஆட்டம் வாஷ்-அவுட் செய்யப்பட்டாலும், செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள பயிற்சி ஆட்டம் முக்கிய உலகக் கோப்பை போட்டிக்கான முன்னோட்டமாக இருக்கும். எனவே, இந்திய அணி முழுபலத்துடன் களமிறங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.