ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் தோல்வி இந்திய வீரர்கள் மீது கடும் விமர்சனத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சூழலில், அவர்களை பலரும் கடுமையாக சாடி வருகிறார்கள். அவர்கள் இருவரும் எப்போது ஓய்வு பெறுவார்கள்? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கேப்டன் ரோகித் ஆடிய 3 டெஸ்ட் போட்டிகளில் 3,9, 10, 3, 6 என ரன்கள் எடுத்தார். மேலும், அவரின் சராசரி 10.93 என பெரும் பின்னடைவைச் சந்தித்தார். இதேபோல் 5 போட்டிகளில் ஆடிய கோலி 190 ரன்கள் மற்றும் 23.75 என்கிற சராசரியை மட்டுமே பெற்றார். இதனால், மூத்த வீரர்களாகிய அவர்கள் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும், இந்திய அணிக்காக ஆடிய நேரம் போக, மீதமுள்ள நேரங்களில் ரஞ்சி டிராபி போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆட வலியுறுத்தப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், பிப்ரவரியில் தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் விதமாக மும்பை கிரிக்கெட் சங்க மைதானத்தில் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா. ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பையில் மோதவுள்ளது. இந்தப் போட்டிக்கு தயாராகி வரும் வீரர்களுடன் ரோகித் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் ரஞ்சி போட்டியில் களமிறங்குவது பற்றி இன்னும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், விளையாடுவது குறித்து இன்னும் அவர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், மும்பை கிரிக்கெட் வீரர்களை உதாரணம் காட்டியுள்ள டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டி.டி.சி.ஏ) செயலாளர் அசோக் சர்மா, விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளிலும் டெல்லிக்காக விளையாட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், "ரஞ்சி டிராபி போட்டியின் கடைசி இரண்டு சுற்றுகளுக்கான டெல்லியின் சாத்தியமான அணியில் கோலி மற்றும் ரிஷப் பண்ட் பெயர்கள் உள்ளன. தற்போது ரஞ்சி டிராபி போட்டிக்கான முகாம் நடந்து வருகிறது. அதனால், விராட் மும்பை கிரிக்கெட் வீரர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, அவர் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளாத நேரங்களில் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லிக்காக விளையாட வேண்டும்.
மும்பையில் பாருங்கள், ரஞ்சி போட்டிகள் கிடைக்கும்போதெல்லாம் அவர்களின் இந்திய வீரர்கள் வரும் கலாச்சாரம் எப்போதும் இருந்து வருகிறது. இது வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் இருப்பதில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் வீரர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ குறிப்பிட்டுள்ளது. விராட் மற்றும் ரிஷப் குறைந்தது ஒரு ஆட்டத்தையாவது விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் விளையாடுவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை." என்று அசோக் சர்மா தெரிவித்தார்.
இதற்கிடையில், டி.டி.சி.ஏ தலைவர் ரோஹன் ஜெட்லி கூறுகையில், "கோலி மற்றும் பண்ட் ரஞ்சி டிராபியில் விளையாட வேண்டும். ஆனால் மற்ற காரணிகளும் உள்ளன. அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் அளவுடன், அவர்கள் உடற்தகுதியில் உச்சத்தில் இருக்க வேண்டும். பல காரணிகளையும் கவனிக்க வேண்டும். இருப்பினும், அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதே முதன்மையானதாக இருக்க வேண்டும்.
“உள்நாட்டுப் போட்டியில் பங்கேற்பது மிகவும் முக்கியமானது. தேசிய அணியில் ஆடுவதாக இருந்தால், வெளிப்படையாக ஒருவர் பங்கேற்க முடியாது, ஆனால் இல்லையெனில், அவர்கள் உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும். வீரர்கள் என்.சி.ஏ மற்றும் தேசிய தேர்வாளர்களால் நிர்வகிக்கப்படுவதால், அவர்களின் சுமை மேலாண்மை போன்ற பல விஷயங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை தங்கள் முன்னுரிமை பட்டியலில் வைத்திருப்பார்கள், இது விதிவிலக்காக முக்கியமானது," என்று அவர் கூறினார்.
கோலி கடைசியாக 2012ல் ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பித்தக்கது.