2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இந்திய அணியில் அதிரடி வீரரான அம்பதி ராயுடுவைத் தேர்வு செய்யாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக மட்டையை சுழற்றிய அவர் 47 என்கிற நல்ல சராசரியைக் கொண்டிருந்தார். இதனிடையே, உள்ளுர் தொடர்களிலும் அவர் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக ராயுடு, 2018 ஐ.பி.எல் தொடரில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூட முக்கிய பங்காற்றி இருந்தார். ஆனால், அந்த நேரத்தில் இந்திய அணி தேர்வாளர்கள், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறையிலும் அசத்தக்கூடிய முப்பரிமான வீரரை தேடி வந்தனர். மேலும் , விஜய் சங்கரை தேர்வு செய்வதிலும்குறியாக இருந்தனர். இதன் காரணமாக ரசிகர்களிடம் இருந்தும், முன்னாள் வீரர்களிடம் இருந்தும் கடும் கண்டனத்தை எதிர்கொண்டது பி.சி.சி.ஐ .
ராயுடு அன்றைய காலக்கட்டத்தில் 50 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 1,694 ரன்கள் எடுத்து இருந்தார். மேலும், டாப் ஆடரில் களமாடி விளையாடும் அவர் அதிரடியாக ரன்களை குவிக்கக் கூடியவராகவும் இருந்தார். ஆனால், அவரை தவிர்க்க நடத்தப்பட்ட அரசியல், அவரை இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க செய்தது. எனினும், ஐ.பி.எல் தொடருக்கான மும்பை மற்றும் சென்னை அணிகளில் முக்கிய வீரராக ராயுடு வலம் வந்தார். தற்போது சாம்பியன் வீரராகவும் உள்ளார்.
உத்தப்பா பரபர குற்றச்சாட்டு
இந்த நிலையில், 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்படுவதற்கு சற்று முன்பு, அம்பதி ராயுடுவிற்கான கதவை மூடியவர் அப்போதைய கேப்டன் விராட் கோலி என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராபின் உத்தப்பா பேசுகையில், "விராட் கோலிக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அல்லது யாரையாவது நன்றாக இல்லை என்று அவர் உணர்ந்தால், அந்த நபரை அவர் உடனே அணியில் இருந்து வெளியேறிவிடுவார். அதற்கு அம்பதி ராயுடு ஒரு சிறந்த உதாரணம். அவர் மிகவும் பாவம். ஒவ்வொரு வீரரும் அந்த நிலையை அடைய கடுமையாக உழைக்கிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் சொந்த விருப்பத்தேர்வுகள் உள்ளன. அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் ஒரு வீரரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு, அவரது முகத்தில் கதவை மூடக் கூடத்து. அது தவறு.
அம்பதி ராயுடுவின் வீட்டிற்கு உலகக் கோப்பை போட்டிக்கான ஆடைகள், உடைகள் மற்றும் கிட்பேக்குகள் அனுப்பப்பட்டது. அப்போது உலகக் கோப்பைக்குப் போகிறேன் என்று ஒரு வீரரோ அல்லது ஒரு நபரோ நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இது எனக்கு மிகவும் முக்கியமானது, நான் மிக முக்கியமான நிலையில் விளையாடுவேன். எனது நாட்டுக்காக கோப்பையை வெல்ல விரும்புகிறேன் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.
அவரது வீட்டிற்கு சூட்கள், உடைகள், கிட்பேக், சாமான்கள் அனைத்தையும் அனுப்பிய பிறகு, நீங்கள் அவரது முகத்தில் கதவை மூடுகிறீர்கள். அது மட்டும் செய்யப்படவில்லை. அவர் அணியில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அநியாயம். அப்படி யாரும் செய்யக் கூடாது.
இவை மனப்போக்கை, மனநிலையை பாதிக்கும் விஷயங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. வீரரையும், மனிதனையும் நீண்ட காலமாக மறந்துவிடுங்கள். ஒருவரின் நம்பிக்கையை நீங்கள் சிதைக்கிறீர்கள், அந்த அடிப்படை தகவல்தொடர்புக்கு எவரும் தகுதியானவர்கள். குறிப்பிட்ட முடிவின் பின்னால் என்ன சிந்தனை இருக்கிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், உத்தப்பா 2024 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராக இருந்ததை மூத்த பத்திரிகையாளர் விமல் குமாருக்கு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா சஞ்சு சாம்சனுடன் எவ்வாறு சமாளித்தார் என்பதை விராட்டின் கேப்டன்சியுடன் ஒப்பிட்டார். ஆனால் கடைசி நேரத்தில், அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
"அதனால்தான் ரோகித் சர்மாவை நான் பாராட்டுகிறேன். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சிவம் துபேவுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்று கேள்விப்பட்டோம். டாஸ் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு தான் சஞ்சு விளையாடவில்லை என்பது தெரிந்தது.
டாஸுக்குப் பிறகு, ஓப்பன் செய்ய வேண்டிய ரோகித், தனது சொந்த தயாரிப்பை விட்டுவிட்டு, சஞ்சுவுடன் 15 நிமிடங்கள் செலவழித்து, அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை விளக்கினார். அந்த நபருக்கும் அவர் சுமந்து கொண்டிருக்கும் ஆற்றலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது, அவர் இன்று விளையாடாவிட்டாலும், கோப்பையை வெல்வதற்கு அவரது ஆற்றல் முக்கியமானது. இது தான் கண்ணியமான தலைவருக்கும் சிறந்த தலைவருக்கும் உள்ள வித்தியாசம். மேலும் எனது பார்வையில், ரோகித் ஏன் ஒரு சிறந்த தலைவர் என்பதற்கான காரணமும் இதுதான்." என்று அவர் கூறினார்.