Virat Kholi | MS Dhoni | IPL 2024 | CSK vs RCB: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக விளையாடி வருபவர் விராட் கோலி. கடந்த 2008ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான அவர் 113 டெஸ்ட், 292 ஒருநாள் மற்றும் 117 டி-20 போட்டிகளில் ஆடி முறையே 8848, 13848, 4037 ரன்களை குவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் களமாடி வரும் கோலி, நடப்பு சீசனில் 13 இன்னிங்ஸ்களில் 155.16 ஸ்டிரைக் ரேட் மற்றும் 66.10 சராசரியுடன் 661 ரன்கள் எடுத்து தொடரில் டாப் ஸ்கோரராக இருந்து வருகிறார்.
தோனி ஓய்வு குறித்து கோலி!
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) அணிகளுக்கு இடையிலான இன்றைய (சனிக்கிழமை) ஆட்டம் தான் இருவரும் இணைந்து விளையாடும் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று எம்எஸ் தோனியின் எதிர்காலம் குறித்து விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஜியோ சினிமா நிகழ்வில் விராட் கோலி பேசுகையில், "இந்தியாவில் உள்ள எந்த மைதானத்திலும் அவர் (தோனி) விளையாடுவதை ரசிகர்கள் பார்ப்பது பெரிய விஷயம்.
நானும் அவனும் மீண்டும் இணைந்து விளையாட இருக்கிறோம். ஒருவேளை இது கடைசி போட்டியாகக் கூட இருக்கலாம். அது உங்களுக்குத் தெரியாது. அதுதான் சிறப்பு வாய்ந்த விஷயம்.
நாங்கள் சில சிறந்த நினைவுகளைப் பெற்றுள்ளோம், இந்தியாவுக்காக சில சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம். ரசிகர்கள் எங்களை ஒன்றாகப் பார்ப்பதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்.
மஹி பாய் (மகேந்திர சிங் தோனி) பற்றி மக்கள் இதையேதான் சொன்னார்கள். ‘இவர் ஏன் ஆட்டத்தை 20வது ஓவருக்கு அல்லது 50வது ஓவருக்கு எடுத்துச் செல்கிறார்.’ ஆனால் அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளை முடித்துக் கொடுத்துள்ளார் என்று பாருங்கள். அவர் தனது பேட்டிங் உத்திகளைப் பற்றி மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கண்டு பாதிக்கப்படாமல் இருந்தவர்.
அவர் என்ன செய்கிறார் என்பதை அறிந்த ஒரே நபர் அவர்தான். மேலும் அங்கிருந்து ஆட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, இது தசை நினைவகம். கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து சென்றால், அவர் வெற்றி பெறுவார் என்பது அவருக்குத் தெரியும்.
எனது எண்ணம் வித்தியாசமாக இருந்தது. 49வது ஓவரில் (ஒருநாள் போட்டிகளில்) அல்லது 19வது ஓவரில் (டி20யில்) ஆட்டத்தை முடித்துவிடுவோம் என்று நினைத்தேன். கடைசியில் அவர் என்னுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தால், சிந்தனை வேறு மாதிரி இருந்தது.
எதிர் அணி பயத்தில் நடுங்கும் அந்த கடைசி ஓவருக்கு அவர் ஆட்டத்தை எடுத்துச் செல்வார்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“