virat kohli press conference Tamil News: இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நாளில் நியூசிலாந்து பவுலர்களின் மிரட்டலான பந்து வீச்சால் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 170 ரன்களில் சுருண்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது.
இந்திய அணியின் இந்த பொறுப்பற்ற பேட்டிங்கை சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர். மேலும் இந்திய அணியின் தோல்விக்கு இந்த வீரர் தான் காரணம் என்று குறிப்பிட்ட விமர்சனம் செய்து வருகிறார்கள். இதில் இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஒருவரை, பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் அதிரடியாக ஆட நினைத்து தனது விக்கெட்டை எதிரணிக்கு எளிதாக வாரி வழங்கியுள்ளார் எனவும், உண்மையில் இந்திய அணியை வெற்றி பெற வைப்பதற்கான நோக்கம் அவரிடம் இருக்கிறதா என்றும் கேள்வியை எழுப்பி வருகின்றனர்
இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ‘அந்த இளம் வீரர் அப்படி விளையாடினால் தான் எங்களால் எதிரணியின் மீது அழுத்தத்தை செலுத்த முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் கோலி சப்போர்ட் செய்யும் அந்த இளம் வீரர் வேறு யாரும் இல்லை, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தான் அது. ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு அறிமுகமான துவக்கத்தில் அதிரடி காட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இடையில் யானைக்கும் அடி சரக்கும் என்பதற்கேற்ப அடி சறுக்கி அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். பிறகு கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த தொடரில் களமிறப்பட்ட இவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடத்த தொடரிலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பெயரை சம்பாதித்திருந்தார்.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக தனது அலட்சியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் பண்ட். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பவுண்டரி ஓட விட வேண்டும் என முனைப்பு காட்டி தனது விக்கெட்டைப் பறிகொடுத்த இவர், 2வது இன்னிங்ஸில் முன்னனி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்காமல் அதிரடியாக ஆட நினைத்து தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்தார்.

பண்ட்டின் இந்த செயல்பாட்டைக் கண்டு வெகுண்டுடெழுந்த இந்திய ரசிகர்கள் அவர் மீண்டும் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார் என்றும், ஆட்டத்தின் போக்கை உணர்ந்து அதற்கேற்றார்போல் விளையாட தவறிவிட்டார் என்றும் சரமாரியான விமர்ச்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ரிஷப் பண்ட் மீது எழுந்து வரும் இந்த விமர்ச்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்துள்ள கேப்டன் கோலி, “தனக்கு வய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவருடைய திறமையை நிரூபித்துள்ளார். என்னைப் பொறுத்தவரை அவர் அணியின் சூழ்நிலையை நன்றாக உணர்ந்து கொண்டுதான் செயல்படுகிறார். சில நேரங்களில் அவர் விளையாடும் விதம் பலன் கொடுக்காது. அப்போதெல்லாம் அவரின்மேல் விமர்சனங்கள் எழும்.
விளையாட்டில் இது எப்போதுமே நிகழும் ஒன்றுதான். அதற்காக நாங்கள் அவருடைய பேட்டிங் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எந்த நிபந்தனையும் வைக்கப்போவதில்லை. எதிரணியின் மீது அழுத்தம் கொடுப்பதற்ககாக, அவர் அப்படி விளையாடித்தான் ஆக வேண்டும். அதுதான் எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கிறது. எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த ப்ளேயராக வருவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிஷப் பண்ட்டின் இந்த அலட்சிய போக்கை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்ச்சித்துள்ளனர். மேலும் அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கு முன்பாக தனது பேட்டிங்கில் இருக்கும் குறையை நீக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அப்படி செய்யாத பட்சத்தில் இங்கிலாந்தில் அவர் தடுமாறுவார் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“