Virat kohli press conference Tamil News: இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில், அந்த அணிக்கு மூத்த வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவை கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ. ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்தும், விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்தும் முன்னதாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழுக்கு பிசிசிஐ தலைவைர் சவுரவ் கங்குலி பேட்டியளித்து இருந்தார்.
அதில், "டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்திறனைப் பொருட்படுத்தாமல், விராட் கோலி டி20 கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்காவிட்டால், ஒயிட்-பால் கேப்டனாகத் தொடர்ந்திருப்பார். அப்போது கேப்டன் பதவியை மாற்றும் திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை. கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், குழப்பத்தைத் தவிர்க்கவே சிவப்பு மற்றும் வெள்ளை பந்து கேப்டன்களை முற்றிலும் பிரிக்க தேர்வாளர்கள் இப்படி முடிவு செய்தனர்.
விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று நாங்கள் (பிசிசிஐ) அவரிடம் கேட்டுக்கொண்டோம். தவிர, ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் நான் பேசினேன். தேர்வாளர்களும் கோலியிடம் பேசினார்கள். ஆனால், கோலி அவர்களின் எவ்வித கருத்துக்களும் செவி சாய்க்கவில்லை" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய விராட் கோலி, "டி20 கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுவதாக அறிவித்ததிலிருந்து (டிசம்பர் 8 ஆம் தேதி வரை), பிசிசிஐ உடன் எனக்கு எந்த தொடர்பு சரியாக நடக்கவில்லை. அவர்களிடம் இருந்து முறையான எந்த பதிலும் கிடைக்கவில்லை.
டெஸ்ட் அணியை தேர்வு செய்வதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு என்னை தொடர்பு கொண்டார்கள். அப்போது ஐந்து தேர்வாளர்கள் நான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று என்னிடம் சொன்னார்கள். ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து என்னை நீக்குவது குறித்து என்னக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்கப்படவில்லை. நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
ஆனால், டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று என்னிடம் யாரும் ஒருபோதும் கூறவில்லை." என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக விராட் கோலியை டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ அவரிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஒருநாள் கேப்டன்சி மாற்றம் குறித்து கோலியுடம் தனிப்பட்ட முறையில் தானே பேசியதாகவும், தேர்வாளர்களும் கோலியிடம் பேசியதாகவும் பிசிசிஐ தலைவைர் சவுரவ் கங்குலி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், டி20 கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டாம் என்று தன்னிடம் யாரும் ஒருபோதும் கூறவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும், கங்குலி தெரிவித்துள்ள கருத்திற்கு முரண்பட்ட கருத்தையும் கோலி கூறியுள்ளார். இதனால் இதில் யார் கூறுவது உண்மையாக இருக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிய நிலையில் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.