'நான் 110 சதவிகிதம் ஃபிட்டாக இருக்கிறேன்; சவாலுக்கு தயார்' - இங்கிலாந்து கிளம்பும் முன் கேப்டன் கோலி

ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் மூன்று ஒருநாள், மூன்று டி20, மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் டெஸ்ட் தொடரை தவிர்த்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதற்காக விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. அதற்கு முன் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விராட் கோலி, “இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் இருந்தது சிறந்த முடிவு என எண்ணுகிறேன். அதற்கு பதில் தொடர் ஓய்வில் இருந்து உடல்தகுதியை சரி செய்ததுதான் எனக்கு சிறப்பானதாகத் தெரிகிறது. நான் அங்கு விளையாடச் சென்றிருந்தால் 90% தான் திருப்தியடைந்திருப்பேன். ஆனால், இப்போது 110% முழு உடற் தகுதியுடன் இருக்கிறேன். ஆகையால், மிகவும் திருப்தியுடன் உள்ளேன்.  தொடருக்கு முன் நான் புத்துணர்வுடன் இருக்க வேண்டும், ஆக, இதுவே சரி.

இங்கிலாந்தில் டெஸ்ட்டில் விளையாடி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. நிச்சயம் அது பெரிய இடைவெளிதான். 2014 தொடரில் என் பேட்டிங் தோல்விகள் பற்றி அதிகம் பேசிவிட்டோம். சாம்பியன்ஸ் டிராபியை இடையில் இங்கிலாந்தில்தான் ஆடினோம் என்று நினைக்கிறேன்… பங்களாதேஷில் இல்லையே!!

கடந்த முறை இங்கிலாந்து செல்லும் போதும் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. நான் நல்ல நிலையில்  இருக்கும் போது நன்றாக ஆடுவேன் என்பது எனக்குத் தெரியும். அயர்லாந்துக்கு எதிரான டி20யில் களம் இறங்குகிறேன். காயங்கள் குணமடைந்து விட்டது.  மும்பையில் 6-7 செஷன்கள் பயிற்சியில் ஈடுபட்டேன். நல்ல பயிற்சி எடுத்தேன். எனவே நான் போட்டிகளுக்கு தயாராகவே உள்ளேன். ஓய்வு இடைவெளி எனக்கு புத்துணர்வு அளிக்கிறது.

உத்தி என்னவென்று கேட்டால், அதில் எந்த மாற்றமும் இருக்காது, தொடருக்குத் தொடர் உத்தியில் மாற்றம் தேவையிருக்காது. பொறுமை இல்லாவிட்டால்தான் உத்தியில் அடிக்கடி மாற்றம் தேவைப்படும். உங்களைப் போல் நாங்களும் யோசிக்கத் தொடங்கினால் அங்குதான் பிரச்சினைகள் தொடங்கும்” என்றார்.

இந்திய – இங்கிலாந்து மோதும் போட்டி அட்டவணை:

டி20 தொடர்:

முதல் டி20 போட்டி – ஜூலை 3,  இரவு 10.00 மணி.

இரண்டாவது டி20 போட்டி – ஜூலை 6,  இரவு 10.00 மணி.

மூன்றாவது டி20 போட்டி – ஜூலை 8,  இரவு 10.00 மணி.

ஒருநாள் தொடர்:

முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 12,  இரவு 10.00 மணி.

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 14, மாலை 3.30 மணி.

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை.17, மாலை 5 மணி.

 

டெஸ்ட் தொடர்:

முதல் டெஸ்ட் – ஆகஸ்ட் 1-5

இரண்டாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 9-13

மூன்றாவது டெஸ்ட் – ஆகஸ்ட் 18-22

நான்காவது டெஸ்ட் – ஆகஸ்ட் 30-செப் 3

கடைசி டெஸ்ட் – செப் 7-11

டெஸ்ட் போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்துடன் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

வருகிற 27 மற்றும் 29ம் தேதிகளில் டுப்ளின் நகரில் இந்த போட்டிகள் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.30 போட்டிகள் இவ்விரு போட்டிகளும் தொடங்குகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close