இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்.27) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் அடித்த மொமினுல் ஹக் 107 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 72 ரன்களும், கே.எல். ராகுல் 68 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, 2-வது இன்னிங்சில் ஆடி வரும் வங்கதேசம் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 26 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
அதிவேக ரன் குவிப்பு - இந்தியா சாதனை
இந்நிலையில் இந்தப் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து அசத்தியது. மேலும், டெஸ்ட் கிரிக்கெடில் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்தியா அதிவேக 50, 100, 150 மற்றும் 200 ரன்களை கடந்து உலக சாதனை படைத்தது.
27,000 ரன்களைக் கடந்த கோலி - சச்சின் சாதனை முறியடிப்பு
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் விராட் கோலி அடித்த ரன்களையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை அடித்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது வெறும் 594 இன்னிங்ஸ்களிலேயே 27,000 ரன்கள் அடித்த விராட், சச்சினின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும் ஒட்டு மொத்த சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 27,000 ரன்களை கடந்த 4-வது வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் முறையே சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்கரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர்.
அதிவேக 27000 ரன்கள் வீரர்கள் பட்டியல்
594 இன்னிங்ஸ் - விராட் கோலி
623 இன்னிங்ஸ் - சச்சின் டெண்டுல்கர்
648 இன்னிங்ஸ் - குமார் சங்கக்கார
650 இன்னிங்ஸ் - ரிக்கி பாண்டிங்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.