இன்னும் ஏழே நாட்களில் ஐபிஎல் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே, ஒரே அணியில் இன்று வரை விளையாடும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே. தோனி, ரெய்னா போன்றோருக்கும் இந்த புகழ் கிடைத்திருக்க வேண்டியது தான். ஆனால், இரண்டு ஆண்டு சிஎஸ்கே தடை அதை தடுத்துவிட்டது.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலியால், ஏனோ பெங்களூரு அணிக்கு மட்டும் கோப்பையை வென்றுத் தர முடியவில்லை. அவர் மட்டுமல்ல, எந்த கேப்டன் தலைமையிலும் பெங்களூரு இதுவரை ஒருமுறை கூட கோப்பை வென்றதில்லை.
பலமான அணி என பெயர் பெற்றிருந்தும், கோப்பை என்பது மட்டும் 'அந்த நிலாவுல பாட்டி வடை சுடுறாங்க பாரு' என்கிற ரீதியில் கனவாகவே உள்ளது. அதிலும், கடந்த 2017 ஐபிஎல் தொடரில், அதளபாதாளத்திற்கு சென்றது பெங்களூரு. எப்படி ஜெயிப்பது? என்ற பார்முலாவையே அந்த அணி மறந்து போயிருந்தது. மற்ற அணிகள் எல்லாம், பெங்களூரு கூட மோதுற போட்டி ஏதும் மிச்சம் இருக்கா பாரு?-னு டைம் டேபிளை செக் பண்ற அளவிற்கு மோசமான நிலையில் இருந்தது.
இந்தாண்டு அந்த அணியின் வீரர்கள் பலர் மாறியிருக்கின்றனர். இந்த நிலையில், கேப்டன் விராட் கோலி, தனது ஐபிஎல் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளார். இதற்காக அவர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பெங்களூரு ரசிகர்கள் சமூக தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இம்முறை நிச்சயம் கோப்பை எங்களுக்கு தான் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.