இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சக்னே அடித்த பந்தை கேப்டன் விராட் கோலி பாய்ந்து சென்று ஒரே கையில் அற்புதமாக கேட்ச் பிடித்து அவுட் ஆக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது. அந்த அணி பேட்டிங் செய்தபோது, இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா 32 வது ஓவரை வீசினார். அவருடைய பந்தை எதிர்கொண்ட மார்னஸ் லபுஸ்சக்னே ஆஃப் சைடில் மரண அடி அடித்தார். ஆனால், பந்து சென்ற திசையில் ஃபீல்ட் செய்துகொண்டிருந்த கேப்டன் விராட் கோலி சிறிது தயங்காமல் பாய்ந்து ஒரே கையில் கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார்.
இதை சற்றும் எதிர்பாராத ரவீந்திர ஜடேஜா, விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் கேட்ச் பிடித்த கேப்டன் கோலியை ஓடி வந்து தூக்கிக்கொண்டார்.
பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சக்னே இப்படி சாத்தியமே இல்லாத ஒரு கேட்ச் பிடிக்கப்பட்டதைப் பார்த்து சோர்ந்து போய் பெவிலினுக்கு நடையைக் கட்டினார்.
இந்த சூப்பர் கேட்ச்க்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர். ரவிந்திர ஜடேஜா உற்சாகமாக கொண்டாடினார். இவர்களுக்கு மதிப்பளிகும் விதமாக கேப்டன் கோலி தனது தொப்பியைக் கழட்டி வெல்கம் செய்தார்.
கோலியின் இந்த அசாதாரண கேட்ச்சைப் பார்த்த இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டிரஸ்ஸிங் ரூமில் கோலியைப் பாராட்டினார்.
கோலி இப்படி சீறிப் பாய்ந்து பிடித்த கேட்ச் வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் பகிர்ந்ததால் வைரல் ஆகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.