Virat Kohli Tamil News: இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவங்களிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, பணிச்சுமை காரணமாக டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் அறிவித்தார். எனினும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தான் கேப்டனாக நீடிக்க விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தார். ஆனால், ஒயிட் - பால் கிரிக்கெட்டில் இரண்டு கேப்டன்கள் நியமிக்க முடியாது என முடிவு செய்த பிசிசிஐ-யின் தேர்வாளர்கள் அவரை டெஸ்ட் அணியில் மட்டும் கேப்டனாக தொடரலாம் என்று கூறினர்.
தென்ஆபிரிக்க அணிக்கெதிரான 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க இருந்த நிலையில், சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கோலி (டிசம்பர் 8ம் தேதி) பிசிசிஐ- யுடன் நடந்த பேச்சு வார்த்தை குறித்து பகிர்ந்து இருந்தார். இது அப்போது பேசுபொருளாக மாறி, சமூக வலைதளங்கள் மற்றும் பொதுத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தென் ஆபிரிக்க மண்ணில் அரங்கேறி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 1-2 கணக்கில் தொடரில் தோல்வியைத் தழுவியது. இதில் 2வது போட்டியில் கேப்டன் கோலி முதுகு வலி காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதில் கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார்.
இந்த தொடரில் 4 இன்னிங்சில் விளையாடி இருந்த கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் சேர்த்து இருந்தார். மேலும், இந்த தொடருக்கு பிறகு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் தான் விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
— Virat Kohli (@imVkohli) January 15, 2022
பிறகு நடந்த தென்ஆபிரிக்க அணிக்கெதிரான 3 ஒருநாள் போட்டிகள் தொடரில், ஒரு சாதாரண பேஸ்ட்மேனாக களமாடிய கோலி, வழக்கம் போல் தனது ஃபார்மிற்கு திரும்புவார் என்றும், தனது 71வது சர்வதேச சதத்தை பதிவு செய்து மிரட்டுவார் என்றும் ரசிகர்கள் ஆவல் கொண்டிருந்தனர்.
முதலாவது ஆட்டத்தில், கேப்டன் ராகுலின் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தொடக்க வீரர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ரன் ரேட்டை மெதுவாக உயர்த்தினார். ஆனால், துரதிஷ்டவசமாக 63 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். 2வது போட்டியில் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 3வது போட்டியிலாவது "சதம்" தாகத்தை தீர்ப்பார் என பெரிதும் ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில், 84 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் மட்டும் சேர்த்து அவுட் ஆனார்.
'ரன் மெஷின்' என அழைக்கப்பட்ட கோலி தனது சர்வதேச சதத்தை பதிவு செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், அவரது பேட்டிங் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், விராட் கோலியின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
எஎன்ஐ (ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல்) செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "விராட் கோலி கட்டாயம் சிறப்பாக விளையாட வேண்டும் என்கிற அழுத்தத்தில் உள்ளார். அவர் 120 சதங்கள் அடித்த பிறகு, திருமணம் செய்திருக்க வேண்டும். அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால், திருமணம் செய்திருக்க மாட்டேன். அது அவருடைய தனிப்பட்ட முடிவு." என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியது தொடர்பாக பேசிய அக்தர், "விராட் கேப்டன் பதவியை விட்டு வெளியேறவில்லை, ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, அவர் தற்போது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மேலும், தன்னை அவர் எதைக் கொண்டு உருவாக்கிக் கொண்டார் என்பதையும் உலகுக்கு காட்ட வேண்டிய தருணத்தில் உள்ளார்.
கோலி எஃகு அல்லது இரும்பினால் செய்யப்பட்டவரா?. இல்லை. அவர் ஒரு சிறந்த மனிதன் மற்றும் ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். அவர் நிறைய முயற்சி செய்ய வேண்டாம். மைதானத்தில் களமிறங்கி விளையாடினாலே போதும். மேலும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் உலகில் வேறு எந்த வீரரையும் விட அதிகமாக சாதித்துள்ளார். எப்போதும் போல் அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
#WATCH | Performance pressure is there on him (Virat Kohli) ...I wanted him to marry...after scoring 120 centuries...I wouldn't have married...had I been in his place... anyway, that's his personal decision..: Former Pakistan fast bowler Shoaib Akhtar on Virat Kohli (23.01) pic.twitter.com/aGRi82kxxE
— ANI (@ANI) January 24, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.